கிளிநொச்சியில் 98 ஆவது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம்

எங்களது போராட்டத்தை தொடர்ந்து நீடிக்கவிட்டு நல்லாட்சி அரசும் அரசியல் தலைமைகளும் வேடிக்கை பார்க்கின்றதா என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் உரிய பதிலை வழங்கக்கோரி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் 98 ஆவது நாளாக இன்றும்(28) தொடர்கின்றது.

இந்நிலையில், எதிர்வரும் 30 ஆம் திகதி தமது நூறாவது நாள் போராட்டத்தை சர்வமதப் பிரார்த்தனைகளோடு மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரார்த்தனையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் பொது மக்கள், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள் என சகலரும் கலந்துகொள்ளுமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி நாங்கள் கடந்த எட்டு வருடங்களாக பல போராட்டங்களை முன்னெடுத்து வந்திருக்கின்றோம்.

எனினும் எவ்வித பதில்களும் கிடைக்காத நிலையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் 98 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும் இந்நிலையில் தமது போராட்டத்தை தொடர்ந்து நீடிக்கவிட்டு நல்லாட்சி அரசும், அரசியல் வாதிகளும் வேடிக்கை பார்க்கின்றனரா என போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like