முடிவின்றி தொடரும் கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களின் போராட்டத்தில் ஒரு சிலர் சுய இலாபத்தை தேடிக் கொள்வதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் தங்கியுள்ள 92 குடும்பங்கள் தங்களுக்கு முறையான வீட்டுத்திட்டத்திட்டங்களையும், அடிப்படை வசதிகளையும் பெற்றுத்தருமாறு கோரி முன்னெடுத்து வரும் போராட்டம் 68 ஆவது நாளாகவும் இன்று(28) தொடர்கின்றது.

குறித்த காணியானது தனியார் ஒருவரின் காணியென்பதால் உரிய அதிகாரிகள் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது.

மேலும் காணி உரிமையாளருடன் பேசியே இதற்கான தீர்வுகளை காணவேண்டிய நிலையில், காணி உரிமையாளர் குறித்த காணிக்கு அதிகூடிய பணத்தை கோருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பன்னங்கண்டி பகுதியில் பசுபதி கமம், ஜொனிக்குடியிருப்பு, சரஸ்வதி கமம் ஆகிய பகுதிகளை தவிர ஏனைய பகுதிகளில் வீதியோரங்களில் அதிகளவான மக்கள் காணிகள் இன்றி தங்கியுள்ளனர்.

குறித்த பசுபதிகமம் பகுதியில் தங்கியுள்ள மக்களுக்கு அந்தக்காணி உரிமையாளர் காணிகளை வழங்கியதையடுத்து அவர்களுக்கான வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன

இந்த நிலையில் பன்னங்கண்டி மக்களின் போராட்டத்தினை பயன்படுத்தி ஒருசிலர் மக்களுக்கான உணவுகளை வழங்குவதாகவும், அவர்களுக்கு உதவுவதாகவும் தெரிவித்து அதன் மூலம் கிடைக்கும் வசதிகளை தாங்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர் என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஏற்கனவே காணி உரிமையாளரால் வழங்கப்பட்ட சிவாபசுபதிகமம் பகுதியில் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகத்தில் உள்ளவர்கள் இரகசியமான முறையில் காணிகளை பெற்று வீட்டுத்திட்டங்களை பெற முயற்சிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like