கிளிநொச்சி, பளை சக்தி கல்வி நிலையத்தின் ஏழாம் ஆண்டு நிறைவு விழாவும், மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும்

வடக்கு மற்றும் கிழக்கிலே வாழ்கின்ற எங்கள் பிள்ளைகள் தற்போதைய காலகட்டத்திலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தமது கல்வியைத் தொடர்வதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி, பளை சக்தி கல்வி நிலையத்தின் ஏழாம் ஆண்டு நிறைவு விழாவும், மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழர்களாகிய நாங்கள் கல்வியிலே மிகவும் தரம் வாய்ந்தவர்களாக விளங்கியுள்ளோம். அதனால்தான் எங்கள் மீது தரப்படுத்தல் என்னும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

எங்களைத் தரப்படுத்திக் கீழே தள்ள முற்பட்டுள்ளார்கள். இப்பொழுது நாம் கல்வியில் மாகாணத்தில் கடைசியாக நிற்கின்றோம், மாவட்டத்திலே கடைசியாக நிற்கின்றோம் என்றால் எங்களிடத்திலே ஏதோ குறைபாடு உள்ளது.

எங்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட யுத்தம் எங்கள் மகிழ்ச்சியைக் காவுகொண்டுள்ளது. அந்த யுத்தத்தால் எங்கள் குடும்ப உறவுகள் அழிக்கப்பட்டுள்ளார்கள். எங்கள் சொத்துக்கள் எல்லாமே அழிக்கப்பட்டுள்ளன.

எங்களுடைய நிலங்களிலே நாம் இன்னும் நிம்மதியாக வாழமுடியாத நிலை தொடர்கின்றது. எங்களைச் சுற்றி இப்போதும் இராணுவத்தினர் ஆயுதங்களோடும் அச்சுறுத்தும் பாணியில் நடந்துகொள்கின்றார்கள்.

ஆகவே எமது மாணவர்களின் கல்வி ஒரு அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே நடைபெறுகின்றது. எமது பிள்ளைகள் அச்ச நெருக்கடிகளுக்குள் தான் கல்வியைத் தொடர வேண்டிய நிலை காணப்படுகின்றது.

இதனால்தான் கல்வியிலே சிலவேளைகளில் சில பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்படுகின்றோம்.

குடும்பங்களிலே இழக்கக் கூடாதவர்களை இழந்துள்ளோம். எமது பிள்ளைகள் தற்போது பல்வேறுபட்ட பாதிப்புக்களுக்கு முகங்கொடுக்க வேண்டியவர்களாகக் காணப்படுகின்றார்கள்.

எமது பிள்ளைகள் இவற்றிலிருந்து மீளவேண்டும். எமது மாணவர்கள் வெற்றிபெறக் கூடிய மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அந்த வகையில்தான் எமது மாணவர்கள் பல சவால்களையும் நெருக்கடிகளையும், எதிர்கொண்டு சாதனை படைத்து வந்துள்ளார்கள்.

நாம் வீழ்ந்து கிடக்கும் இனமல்ல. திட்டமிட்டு குறுக்குவழிகளில் வீழ்த்தப்பட்ட இனம். இப்போதுதான் மெல்ல மெல்ல எழுந்து வருகின்றோம்.

நிச்சயமாக ஒரு நாள் எமது இலக்கினை எட்டி எல்லாத்துறைகளிலும் மீண்டும் முன்னேறி வருவோம் என்ற நம்பிக்கை எங்கள் எல்லோரதும் மனங்களிலும் ஆழப்பதிந்துள்ளது.

அதற்காக நாம் எமது இலக்கினை நோக்கி நம்பிக்கையுடன் தொடர்ந்து பயணிப்போம் என மேலும் தெரிவத்துள்ளார

You might also like