கிளிநொச்சியில் உளவியல் மற்றும் முகாமைத்துவ செயலமர்வு

அகவிழி திறப்போம் எனும் தலைப்பில் கிளிநொச்சி மாவட்ட பாடசாலை அதிபர்களுக்கான உளவியல் மற்றும் முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த செயலமர்வு நேற்று காலை முதல் மாலை வரை கிளிநொச்சி மாவட்ட கல்வி கலாச்சார அமையத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட பாடசாலை அதிபர்களுக்கான மேற்படி செயலமர்வு கனடா நாட்டில் வசிக்கும் செந்தில்குமரன் நிவாரண நிதியத்தின் முழுமையான நிதிப்பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட கல்வி கலாச்சார அமையத்தின் தலைவர் ப.குமாரசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா கலந்து கொண்டு செயலமர்வை ஆரம்பித்து வைத்திருந்தார்.

இதன்போது கனடா நாட்டின் செந்தில்குமரன் நிவாரண நிதியத்தின் இயக்குநர் செந்தில்குமரன் இணைய வழி ஊடாக இணைந்து கருத்து தெரிவிக்கையில்,

தாயகப் பிரதேசங்களிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்குத் எமது நிதியம் பல்வேறுபட்ட உதவிகளைச் செய்து வருகிறது.

குறிப்பாகக் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மக்களிடையே போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டங்களுக்காக பெருமளவு நிதியை வழங்கியுள்ளது.

பாடசாலை மாணவர்களின் மனங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனூடாகப் போதையற்ற சமூகத்தைக் கட்டியெழுப்புவதே எமது பிரதான குறிக்கோள்.

இதேவேளை, எமது நிறுவனத்திற்கு ஆதரவு தந்து செயற்படும் கனேடிய தமிழ் உறவுகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த செயலமர்வில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் எதிர்காலச் சந்ததிக்காக உங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய முன்வாருங்கள்.

அதற்கு முழு ஒத்துழைப்பையும் எமது நிறுவனம் தரும் எனவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செயலமர்வில் வளவாளர்களாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன், வடக்கு,கிழக்கு இணைந்த மாகாணத்தின் முன்னாள் தொழில் திணைக்கள பணிப்பாளர் இ.செல்வின், கிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மோகனபவன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like