கத்திக்குத்தில் முடிந்த வேலிச்சண்டை: ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் உதயன்மூலை பாடசாலை வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான, 39 வயதுடைய நவரெட்ணம் ரவி என்பவரே நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

உதயன்மூலை, பாடசாலை வீதியில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கிடையில் நீண்ட காலமாக இருந்து வந்த வேலி தொடர்பான சர்ச்சையே கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்தவர் அருகிலுள்ள மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட இருவரை சந்தேகத்தின் பேரில் தாம் கைது செய்துள்ளதாகவும் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்ற போது அவ்விடத்தில் இருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் சுற்றுவேலி என்பன அடித்து நொருக்கி சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like