பூர்வீக நிலத்திற்கு திரும்பச் செல்ல வலியுறுத்தி இரணைதீவு மக்கள் பேரணி

கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைதீவு மக்கள் தாங்கள் தங்களின் பூர்வீக நிலத்திற்கு செல்ல திரும்பச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு கிளிநொச்சி திரேசாம்பாள் ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமான பேரணி கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தை சென்றடைந்து அங்கு மாவட்ட அரச அதிபரிடமும் மகஜரும் கையளிக்கப்பட்டது.

இரணைதீவு மக்கள் தங்களின் பூர்வீக நிலத்திற்கு செல்வதற்கான கவனயீர்ப்பு போராட்டத்தை இம்மாதம் முதலாம் திகதி க இரணைமாதா நகரில் ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிலையில் அவர்களது போராட்டம் 29ஆவது நாளை எட்டியுள்ள நிலையிலும் எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவர்கள் எமது பூர்வீக நிலம் எமக்கு வேண்டும், இரணைதீவில் நிரந்தரமாக குடியமர்ந்து தொழில் செய்யும் உரிமை வேண்டும், எமது காணிகள் கால்நடைகள் பராமரிக்க வேண்டும்.

வாழ்வாதாரத்தை மேம்படுத்த மிகச் சிறந்த இவ்விடம் வேண்டும், எமது தீவு எம்மைவிட்டுப் பறிபோகும் அபாயாத்திலிருந்து காப்பற்றப்பட வேண்டும்.

தீவின் வளங்கள் அந்நியர்களால் சூறையாடப்படும் நிலை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், தீவை ஆக்கிரமித்துள்ள கடற்படை முற்றாக வெளியேற்றப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இப்பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ,மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

You might also like