யாழ்.வர்த்தகர்களிடம் ஓர் வேண்டுகோள்! தெற்கிலுள்ள உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்

தெற்கில் பேரிடரினால் அவதிக்குள்ளான மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வருமாறு யாழ். குடாநாட்டு வர்த்தகர்களிடம் யாழ். வணிகர் கழகம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் யாழ். வணிகர் கழகம் இன்று (29) விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டின் தெற்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எமது சகோதர மக்கள் பெரும் துன்பங்களுக்கும், அழிவுகளுக்கும் முகம் கொடுத்திருக்கும் இச் சந்தர்ப்பத்தில் மனிதாபிமான அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் பாரிய பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு.

நேற்றுவரை எம்மோடு இந்த நாட்டில் வாழ்ந்து வந்த நூற்றிற்கும் மேற்பட்ட மக்கள் இயற்கையின் சீற்றத்தின் காரணமாக உயிரிழந்து போயுள்ள நிலையில், இன்னும் பலர் காணாமல் போயுள்ள நிலையில், இலட்சக் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், உண்ண உணவின்றி வாடும் நிலைமையை நாம் அறிகின்றோம்.

பலத்த காற்றும் மழையும் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் உங்களின் உதவிக்கரம் மிக அவசரமாக தேவைப்படுகின்றது. இந்த தருணத்தில் வர்த்தகப் பெருமக்களாகிய தங்களிடம் இருந்து பெறக்கூடிய உலர் உணவுப் பொருட்கள், உடுபுடவைகளை உடனடியாகச் சேகரித்து யாழ்ப்பாண அரசாங்க அதிபரூடாக தெற்கில் அவதியுறும் மக்களுக்கு கொண்டு போய்ச் சேர்க்க ஆவண செய்யப்பட்டுள்ளது.

மேற்படி உலர் உணவுப்பொருட்கள், உடுபுடவைகள் வழங்க முடியாதவர்கள் அதற்கான நிதியுதவியினை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

நாளைய தினம் செவ்வாய்க்கிழமை (30-05-2017) தங்கள் வர்த்தக ஸ்தாபனங்களுக்கு இதற்காக அனுப்பி வைக்கப்படும் பாரவூர்திகளில் அரிசி, மா, சீனி, பால்மா, பிஸ்கட் வகைகள், தண்ணீர்ப் போத்தல்கள், தீப்பெட்டிகள், உடுபுடவைகள் போன்ற அன்றாடம் தேவைப்படும் பொருட்களை வழங்கி உதவவும்.

எனவே, வர்த்தகப் பெருமக்கள் உலர் உணவுப்பொருட்களை, உடுபுடவைகளை தங்களால் இயன்றளவு வழங்கி உதவுமாறு யாழ். வணிகர் கழகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

You might also like