கொள்ளையில் ஈடுபட்ட ஏழு பெண்கள் : மடக்கிப்பிடித்த இளைஞர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் உள்ள ஆலயம் ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏழு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தின் கும்பாபிசேகம் இன்று பிற்பகல் சிறப்பாக நடைபெற்றது. இதில் பெருமளவான பக்தர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது நான்கு பெண்களின் கழுத்துகளில் இருந்த மாலைகள் அறுக்கப்பட்டதை தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினரும் இளைஞர்களும் துரித கதியில் செயற்பட்டதன் காரணமாக ஆலயத்தின் வளாகம் மற்றும் வீதிகளில் இருந்து ஏழு பெண்களை பிடித்துள்ளனர்.

அவர்களை விசாரணை செய்தபோது அவர்களிடம் இருந்து கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஒரு தங்க மாலை மீட்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் ஏழு பேரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த ஏழு பெண்களும் குழுவாக இரண்டு ஆண்களுடன் வந்து இந்த கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இரண்டு ஆண்களும் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொதுமக்கள் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

இந்த குழுவினர் ஆலய உற்சவங்களுக்கு சென்று இவ்வாறான கொள்ளைகளில் ஈடுபட்டுவருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like