வவுனியாவில் பாதுகாப்பு கோரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் தாயும் மகனும் தஞ்சம்

வவுனியா பொலிசார் பக்கச்சார்பாக செயற்படுவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்தும் தமக்கு பாதுக்காப்பு கோரி வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் தாயும், மகனும் அடைக்கலம் புகுந்த சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட தாயார் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா, தாண்டிக்குளம், முதலாம் ஒழுங்கைப் பகுதியில் வசிக்கும் ஒருவர் அந்த ஒழுங்கைப் பகுதியில் தனது வாகனத்தை நிறுத்தி வைப்பது வழங்கம். இதனால் அந்த ஒழுங்கையில் வேறு வாகனங்கள் பயனிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் அவ் ஒழுங்கையில் வசித்த பலரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர். இதனையடுத்து அவ் ஒழுங்கையில் வசிக்கும் பலர் கடிதம் ஒன்றினை எழுதி வவுனியா நகரசபை, பிரதேச செயலாளர், போக்குவரத்து பொலிசார் ஆகியோருக்கு வழங்கியிருந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த குறித்த வாகன உரிமையாளரும் அவரது குழுவினரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் குறித்த பகுதியில் உள்ள எமது வீட்டில் புகுந்து அங்கு நின்ற இளைஞனான எனது மகன் மீது தாக்குதல் நடத்தியியுள்ளதுடன், தடுக்க சென்ற என்மீதும் தாக்கியுள்ளனர். இதன்போது வீட்டில் நின்ற மோட்டர் சைக்கிளும் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், மகன் அணிந்திருந்த சங்கிலியும் அறுக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மகன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், உடனடியாகவே நான் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்தேன். ஆனால் பொலிசார் குறித்த பகுதிக்கு வரவில்லை. இதனையடுத்து பொலிசாரின் 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கும் முறைப்பாடு செய்தோம். பின்னர் இரவு 8 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். தாக்குதலாளிகளினது புகைப்படங்களை வழங்கியபோதும்  பொலிசார் அவர்களை நேற்று மாலை வரை கைது செய்யவில்லை.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகனை வீட்டிற்குச் செல்லுமாறும் வலியுறுத்தியுள்ளனர். நேற்று மாலை வைத்தியசாலையில் இருந்து தாக்குதலுக்குள்ளான மகனை வீட்டிற்கு செல்லுமாறு கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து தாக்குதலாளிகளை கைது செய்யாமையால் தாம் வீட்டிற்கு செல்ல முடியாது அங்கு செல்ல அச்சமாக இருப்பதாக மகனும் நானும் வைத்தியசாலை பொலிசாருக்கு தெரியப்படுத்தினோம். ஊடகவியலாளரக்கும் குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தினோம்.

வைத்தியசாலைக்கு வந்த ஊடகவியலாளர்கள் எங்களது பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறிந்து குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொலிசார் மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக அவசர தொலைபேசி இலக்கம் என்பவற்றுக்கும் தெரியப்படுத்தியிருந்தனர். ஆனால் அவர்கள் இது குறித்து கவனம் செலுத்தவில்லை. இதனால் நானும், எனது மகனும் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு இரவு 9 மணியளவில் சென்று பொலிசாரின் அசமந்த செயற்பாடு மற்றும் எமது அச்ச நிலை தொடர்பாகவும் அங்கு கடமையில் நின்ற அதிகாரியிடம் முறையிட்டோம் எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வவுனியா பொலிசார் வரவழைக்கப்பட்டு அவர்களது முறைப்பாடு தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன் குறித்த இளைஞனையையும், தாயாரையும் பொலிசாரின் வாகனத்தில் ஏற்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், இரவு அவர்களது வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. தாக்குதல் சம்பவம் தொடர்பான சந்தேகநபர்களை பொலிசார் தற்போது தேடி வருகின்றனர்.

You might also like