2 வாரகால அவகாசம் கேட்ட ஜனாதிபதி! மறியல் போராட்டத்தை கைவிட்ட மக்கள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஆராய்வதற்காக 2 வாரகால அவகாசம் ஜனாதிபதியால் கோரப்பட்டுள்ளமையையடுத்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஏ9 வீதியை மறித்து மேற்கொள்ளப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை அரசு எந்த பதிலையும் வழங்காத நிலையில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று நூறாவது நாளை எட்டியுள்ளது.

இதனையொட்டி வடக்கு கிழக்கிலுள்ள காணாமல் போனவர்களின் உறவுகள் கிளநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஒன்றுகூடி சர்வமத பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்ததுடன் வீதி மறியல் போராட்டத்தினையும் முன்னெடுத்திருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மத்தலைவர்கள் பொதுமக்கள் ஒன்றிணைந்து பகல் ஆலயத்தில் இடம்பெற்ற சர்வமத வழிபாட்டைத்தொடர்ந்து ஏ-9 வீதியின்

கந்தசுவாமி கோவில் முன்பாக இரண்டு வழிப்பாதைகளையும் மறித்து மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஏ-9 வீதி வழியாக போக்குவரத்துக்கள் முற்றாக துண்டிக்கப்பட்டன. குறித்த சமயத்தில் ஏ-9 வீத வழியாக அவசர அம்பியூலன்ஸ் சேவைகளுக்கு மாத்திரம் வழிவிடப்பட்டிருந்தது.

கிளிநொச்சி நகரின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்துவருகின்ற போராட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்குமாறு கிளிநொச்சிப் பொலிஸார் கிளநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் ஒன்றை செய்திருந்தனர்.

இதன்போது, ஒன்றுகூடுவதற்கும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் அரசியலமைப்பில் தங்களுக்குள்ள உரிமையை நீதிமன்றம் மதிக்கின்ற அதேவேளை தங்களின் ஆர்ப்பாட்டத்திற்கு பொது ஒழுங்கிற்றும் பொதுமக்களின் நலனிற்கும் பாதிப்பு ஏற்படாதவாறு அவ்வார்ப்பாட்டத்தினை முன்னெடுக்க அறிவுறுத்தப்படுகின்றீர் என நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கிளநொச்சி நகரில் அதிகளவான பொலிசார் குவிக்கப்பட்டனர். குறிப்பாக கிளநொச்சி மாவட்டச்செயலகத்தை மக்கள் முற்றுகையிடலாம் என்ற நோக்கத்தில் கிளநொச்சி மாவட்டச்செயலக வளாகத்தில் அதிகளவான பொலிசார் குவிக்கப்பட்டதுடன் வீதித்தடைகளும் கலகமடக்கும் பொலிசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்புப்போராட்டத்தில் நூறாவது நாளான இப்போராட்டத்தில் சட்டத்தரணிகள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், மூத்த அரசியல் வாதியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினனருமான வி.ஆனந்தசங்கரி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், வினோநோதராதலிங்கம், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மத்தலைவர்கள் மாவட்ட சிவில் அமைப்புக்கள் பொதுமக்கள் ஆதரவுகளை வழங்கியிருந்தனர்.

தொடர்ந்து, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் தங்களுடைய உறவுகள் தொடர்பில் அரசு உரிய பதிலை வழங்கவேண்டுமென தங்களுடைய கோரிக்கை அடங்கிய மகஜரை கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன் அவர்கள் கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலடிக்குச்சென்று மகஜரைப் பெற்றுக்கொண்டார்.

குறித்த மகஜரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல்களை உடனடியாக வெளியடவேண்டும். இரகசிய தடுப்பு முகாமில் தடுத்து வைத்திருப்பவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவதுடன் அவர்களை சென்று பார்வையிடுவதற்கும் அனுமதிக்கவேண்டும், எமது இந்த கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து அரசாங்கமும்

சர்வதேசமும் எமது உறவுகளுடன் நாம் இறப்பதற்கு முன் சில நாட்களாவது வாழ வழி செய்யவேண்டும். இச்சந்தர்ப்பம் தவறவிடாவிட்டால் எமது போராட்டத்தை அடுத்து கட்டத்திற்கு நகர்த்துவது தவிர்க்கமுடியாமல் போகும் என்று குறித்த மகஜரில் குறிப்பிட்டுள்ளனர்.

மகஜரைப்பெற்றுக்கொண்ட மேலதிக அரசாங்க அதிபர் குறித்த கோரிக்கையை ஜனாதிபதி செயலகத்திற்கு உடனடியாக அனுப்புவதாக தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக ஆராய்வதற்காக 2 வார கால அவகாசம் ஜனாதிபதியால் கோரப்பட்டுள்ளமையை அடுத்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் ஏ-9 வீதியை மறித்து மேற்கொள்ளப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

எந்த ஒரு தீர்வுகளும் வழங்காது, எங்களது போராட்டங்களை தொடர்ந்து நீடிக்க விட்டு நல்லாட்சி அரசும் அரசியல் தலைமைகளும் வேடிக்கை பார்க்கின்றது என தெரிவித்து மக்கள் போராட்டத்தின் 100 ஆவது நாளான இன்று ஏ-9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஏ-9 வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டது. எனினும் பொலிஸார் மாற்றுவழியூடாக வாகனங்களை திருப்பி போக்குவரத்தை சீர் செய்தனர்.

காலை முதல் மாலை வரை தொடர்ந்த போராட்டம் இரு கட்டங்களாக பிரிந்து ஒரு பகுதி மக்கள் ஏ-9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட அதேவேளை, ஒரு பகுதி மக்கள் மாவட்டச் செயலகத்தை நோக்கியும் சென்றனர்.

இதன்போது, கிளிநொச்சி மாவட்ட செயலர் எஸ்.சத்தியசீலன்,

‘ஜனாதிபதி செயலகத்தால் வடமாகாண ஆளுநர் ஊடாக எமக்கு மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக இரண்டு வாரங்கள் அவகாசம் தேவையாகவுள்ளது. அத்துடன் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஜனாதிபதியை சந்தித்து தமது கோரிக்கைகள் தொடர்பில் தெரிவிப்பதற்கான சந்திப்பும் ஏற்பாடு செய்யப்படும்’ என தமக்கு அனுப்பி வைக்கபடப்டுள்ள மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இரு வாரங்கள் அமைதி காக்கவும்’ என கோரிக்கை விடுத்தார். இதற்கமைய ஏ-9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வீதியை விட்டு விலகி கந்தசாமி ஆலய முன்றலில் வழமையாக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை தொடர்கின்றனர்.

 

You might also like