மைதானத்தில் இளம் குடும்பஸ்தர் அடித்துக் கொலை : இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை மைதானத்தில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் போது இளம் குடும்பஸ்தர் அடித்துக் கொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த வழக்கு விசாரணைகள் நேற்று ஆரம்பமாகியுள்ளதுடன் இன்றும் வழக்கின் தொடர் விசாரணைகள் இடம்பெறவுள்ளது.

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையே நடைபெற்ற வருடாந்த கிரிக்கெட் போட்டியின் போது பற்றிக்ஸ் கல்லூரின் பழைய மாணவனான அமலன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 6 பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த வழக்கின் போது நடைபெற்ற 3ஆம் எதிரியின் சட்டத்தரணியின் குறுக்கு விசாரணையுடன் நேற்று வழக்கு விசாரணை ஆரம்பமானது. இதன்போது 2ஆம் சாட்சியான அமலசிங்கம் துசிந்தன் சாட்சியமளித்துள்ளார்.

அமலனுக்கு அடித்தவர்களை நான் மைதானத்தில் பார்த்தேன். அடையாள அணி வகுப்பிலும் அவர்களில் ஐந்து பேரை அடையாளம் காட்டியதாக தெரிவித்துள்ளார்.

அமலன் திரும்பத் தாக்கவில்லை. இவர்கள்தான் அமலனைத் தாக்கினார்கள். நான் போய் அமலனைத் தூக்கும் போது, அவனுக்கு மூச்சுப் பேச்சு எதுவும் இருக்கவில்லை.

அமலனுக்கு அடித்தவர்களில் இரண்டு பேர் வளையமுடியாத பைப் வைத்திருந்தார்கள். றம் அடிக்கும் தடியாலும் அவர்கள் அடித்தார்கள். அமலனுக்கு அவர்கள் சுற்றி நின்று அடித்தார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமலன் அடியை வாங்கிக் கொண்டுதான் நின்றான். அவன் எதுவுமே செய்யவில்லை எனவும் நேற்று இளஞ்செழியன் முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார்.

இதை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணைகள் இன்றும் யாழ்.மேல் நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like