நயினாதீவில் புத்தர் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்த பிரதமர் பணிப்பு

யாழ்.நயினாதீவில் புத்தர் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணித்துள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

நயினாதீவில் புத்தர் சிலை அமைக்கப்பட்டு வருகின்றது எனவும், அதனை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் வலியுறுத்தினார். இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நயினாதீவில் அமைக்கப்படும் புத்தர் சிலைக்கு முறையான அனுமதிகள் எவையும் பெறப்படவில்லை எனப் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தபோது, நயினாதீவில் அமைக்கப்படும் புத்தர் சிலை தொடர்பில் சுட்டிக்காட்டினோம்.

அதனை ஆராய்ந்த அவர் அதன் பணிகளை நிறுத்துமாறு உரியவர்களுக்குப் பணித்தார்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

“நயினாதீவில் புத்தர் சிலை அமைப்பது தொடர்பில் முறையான அனுமதிகள் பெறப்படவில்லை. அத்துடன், கரையோரப் பாதுகாப்பு திணைக்களமும் எவ்வித அனுமதிகளையும் வழங்கவில்லை.

எனினும், கடற்படையின் உதவியுடன் கட்டுமானப் பணிகள் தற்போதும் இடம்பெறுகின்றன” என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் சுட்டிக்காட்டினார்.

ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பதிலளித்தார்.

You might also like