முக்கிய வழக்கு ஒன்றிலிருந்து விலகிய நீதிபதி

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கிலிருந்து தான் விலகிக் கொள்வதாக நீதியரசர் விஜித் மலல்கொட தெரிவித்துள்ளார்.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியில் (சைட்டம்) மருத்துவர்களாக பட்டம் பெற்றுள்ளவர்களுக்கு அரசாங்க மருத்துவமனைகளில் சேவைக்காலப் பயிற்சியை நிறைவு செய்ய உரிமை இருப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னதாக தீர்ப்பளித்திருந்தது.

இதனை எதிர்த்து இலங்கை மருத்துவக் கவுன்சில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவொன்றை சமர்ப்பித்துள்ளது.

குறித்த மனுவை விசாரணைக்கு ஏற்பது தொடர்பான விவாதம் புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது உச்ச நீதிமன்றத்தின் விஜித் மலல்கொட, சிசிர ஆப்ரு, அனில் குணரத்தின ஆகிய மூன்று பேர் அடங்கிய அமர்வு முன்னால் விவாதம் முன்னெடுக்கப்பட்டது.

எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சைட்டம் கல்லூரிக்கு சார்பாக தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் குழுவில் தான் இருந்த காரணத்தினால் உச்ச நீதிமன்றத்தில் அதற்கு எதிரான வழக்கில் நீதிபதியாக இருக்க தான் விரும்பவில்லை என்று தெரிவித்து நீதிபதி விஜித் மலல்கொட வழக்கின் விசாரணையிலிருந்து விலகிக் கொண்டுள்ளார்.

You might also like