கிளிநொச்சியில் பட்டப்பகலில் குத்தி கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்! மனைவி சாட்சியம்

கிளிநொச்சி – கனகபுரம் பகுதியில் பட்டப்பகலில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தரின் மனைவி நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.

குறித்த கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் கிளிநொச்சி நீதிவான் மன்றில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போதே கொலை செய்யப்பட்ட நபரின் மனைவி இவ்வாறு சாட்சியமளித்துள்ளார்.

“நாங்கள் கடைக்கு முற்பணம் கொடுத்திருந்தோம். கடையை மீள ஒப்படைத்துவிட்டு முற்பணமாக கட்டிய பணத்தை கேட்டோம். பணம் தராது அவர் இழுத்தடித்து வந்தார்.

கொலை நடைபெற்ற தினம் பகல் வேளையில் பணத்தை வாங்குவதற்காக நானும், கணவரும், மகளும் சென்றோம்.

அப்போது எம்மிடம் பணம் வாங்கவில்லை எனக் கூறிய அவர், எனது கணவரை கத்தியால் வெட்டினார். சத்தம்கேட்டு தடுக்கச் சென்ற என்னையும் அவர் வெட்­டிக் காயப்படுத்தினார்” என்று கொலை செய்யப்பட்ட நபரின் மனைவியான கிருஸ்ணவேணி நீதிமன்றில் வாக்குமூலமளித்தார்.

குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் விளக்கமறியலை எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டார்.

கிளிநொச்சி – கனகபுரம் பகுதியில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 5 பிள்ளைகளின் தந்தையான நாகராசா திருக்குமார் என்பவர் உயிரிழந்ததுடன், அவரது மனைவி திருக்குமார் கிருஸ்ணவேணி படுகாயமடைந்தார்.

மேலும், இந்தக் கொலையுடன் நேரடியாகத் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் கிளிநொச்சிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like