பொது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள வவுனியா தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள்

வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகம் மேற்கொண்டு வரும் வெள்ள நிவாரண பணிகளில் வவுனியா தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும் பங்களிப்பு செய்துள்ளனர்.

தொழில்நுட்ப கல்லூரி அதிபர் ஆ.நற்குனேஸ்வரனின் ஏற்பாட்டில் அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்கள் தமது பங்களிப்பை பல வகையிலும் ஆற்றியுள்ளனர்.

வெள்ள நிவாரண பணிகளில் மாவட்ட சமூக சேவை அலுவலகம் ஈடுபட்டுள்ள நிலையில், தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் முன்வந்து வீடுகளிலும், தனியார் நிறுவனங்களிலும் நிவாரண பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்களின் இந்த செயற்பாடு பல பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், அவர்கள் சமூகத்துடன் இணைந்து பங்காற்றுவது சமூக அக்கறையுடன் கல்வியை கற்பது அப்பகுதி மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

மேலும், அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் இணைந்து சிறுவர்களுக்கான அவசர நிவாரண பொதிகளை ஒப்படைத்துள்ளதுடன், அவற்றை அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.வசந்தரூபன் உரிய வாகனங்களில் ஏற்றி அனுப்பும் ஏற்பாடுகளை செய்துள்ளார்.

இதேவேளை, தொடர்ந்தும் வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகத்தில் பொதுமக்கள் நிவாரண பொருட்களை ஒப்படைத்த வண்ணம் உள்ளனர் என மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாஸன் தெரிவித்தார்.

You might also like