கனகராயன்குளத்தில் மாணவன் மரணம் தொடர்பில் கைதாகிய ஆசிரியர் பிணையில் விடுதலை

வவுனியா, கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில் கைதாகிய குறித்த பாடசாலை ஆசிரியர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த புதன்கிழமை குறித்த பாடசாலையில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு சிரமதான பணியின் போது தரம் 10 மாணவர்களுக்கும், உயர்தர மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து உயர்தர மாணவன் ஒருவன் மீது சித்திர பாட ஆசிரியர் ஒருவர் கன்னத்தில் தாக்கியிருந்தார். இதனால் விரக்தியடைந்த மாணவத் தலைவனான உயர்தர மாணவன் வீட்டிற்கு சென்ற பின் தனது ஆடைகளை மாற்றிவிட்டு குறித்த ஆசிரியரின் வீட்டிற்கு சென்று தன்னிலும் கீழ் மட்ட மாணவர்களுக்கு மத்தியில் ஏன் அடித்தீர்கள் எனக் கேட்டு விட்டு வீடடிற்கு சென்று நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது மரணமடைந்தான்.

த.ஜனார்த்தனன் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கனகராயன்குளம் பொலிசார் மாணவன் மீது தாக்கியதாக கனகராயன்குளம் பாடசாலை சித்திர ஆசிரியரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர் வவுனியா நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டிருந்தார்.

நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணைகளின் பின் குறித்த ஆசிரியர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

You might also like