பதுங்கு குழிகளில் காப்பாற்றப்பட்ட மகனின் உயிரை பறித்து விட்டார்களே… தந்தை உருக்கம்

ஆசிரியரின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் தற்கொலை செய்து கொண்ட வவுனியா மாணவனின் இறுதி நிகழ்வுகள் குறிசுட்டான்குளத்தில் நடைபெற்றது.

17 வயதான தர்மராசா ஜனார்த்தனனின் இறுதி நிகழ்வுகள் அவருடைய கிராமமான அம்பாள்நகர், குறிசுட்டான்குளத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது உயிரிழந்த மாணவனின் தந்தை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்று வந்த எனது மகனை, பல மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் ஒருவர் அடித்தார். இதனால் மனமுடைந்த எனது மகன் தற்கொலை செய்து கொண்டார்.

பாடசாலையில் சிரமதானம் செய்து கொண்டிருந்த போது எனது மகனுக்கும் இன்னொரு மாணவனுக்கும் ஏற்பட்ட முறுகல் காரணமாகவே ஆசிரியர் எனது மகனை மாத்திரம் குறி வைத்து தாக்கியுள்ளார்.

சம்பவம் நடந்த அன்றைய தினம் வீட்டுக்கு வந்த எனது மகன் எவருடனும் கதைக்கவில்லை. சாப்பிட்டு விட்டு பாடசாலை உடையை கழுவுவதற்கு சென்ற வேளையில் பாடசாலையில் நடந்த சம்பவம் நினைவிற்கு வந்துள்ளது. இதன் காரணமாக தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

பாடசாலையில் நடைபெற்ற சம்பவம் எனது மகனின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதன் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

எங்கள் கிராமமான கனகராயன்குளத்தைச் சேர்ந்த மக்கள் இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் வரை இடம்பெயர்ந்திருந்தோம். யுத்தம் நடைபெற்ற காலங்களில் பதுங்கு குழிகளில் வைத்து காப்பாற்றி கொண்டு வந்த எனது மகனை அநியாயமாக பலி கொடுத்து விட்டேன்.

இந்த இழப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நாங்கள் கூலி வேலை செய்யும் ஏழை விவசாயிகள். எனது மகனுக்கு நடந்த சோகம் இன்னொரு மாணவனுக்கு ஏற்படக் கூடாது. எமது பிள்ளைகளை பாடசாலைக்கு ஆசிரியர்களை நம்பித்தான் அனுப்புகின்றோம். இன்று ஆசிரியர்களே எமது குழந்தைகளுக்கு எமனாக மாறியுள்ளனர். எனது மகனின் மரணத்தை பாடசாலை சமூகம் மறைப்பதாலோ அல்லது நீர்த்துபோகச் செய்வதாலோ மாணவ சமூகத்துக்கு நீதி கிடைக்க போவதில்லை என தெரிவித்தார்.

குறித்த மாணவன் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த மாணவனின் மரணத்திற்கு காரணம் என சந்தேகிக்கப்படும் ஆசிரியர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு வவுனியா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

You might also like