வவுனியாவில் வறுமையில் வாழும் குடும்பத்திற்கு உதவி செய்த வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகம்

வவுனியா தோணிக்கல் வள்ளுவர் வீதியில் நீண்ட நாட்கள் வேயப்படாது நீலத்தலப்பால் மூலம் மூடப்பட்ட நிலையில் இருந்த மழைகாலங்களில் நீர் ஒழுக்கினால் பாதிக்கப்பட்ட வீட்டில் 84 வயது தாயும் 58 வயது திருமணம் செய்யாத மகளும் வாழ்ந்து வந்தனர் .

இவர்கள் அண்மையில் தமது வீட்டை மேய்ந்து தர உதவிசெய்யுமாறு வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்திற்கு வருகை தந்தனர் .இவர்களது நிலையை நேரில் சென்று கண்டறிந்த நாம் உதவியைப் பெறுவதற்காக எமது முகப்புத்தகம் மூலம் உதவும் உள்ளங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தோம் .இதனை கண்ட கனடா புன்னகை அமைப்பினர் வழமைபோல் தமது கொடையாளர்களின் கவனத்திற்கு இதனைக்கொண்டு வந்து உதவி பெற்றுத்தந்தனர் .

இன்று 02.06.2017 வெள்ளிக்கிழமை குறித்த வீட்டிற்குச் சென்று பிலிப்பையா இராஜபூபதி என்ற அந்த அம்மாவிற்கு வீடு மேய்வதற்கான ஒரு தொகை பணத்தை கையளிக்க முடிந்தது. இவர்கள் வளவில் விளையும் பொருட்களை விற்று சீவியம் நடத்தி வருகின்றனர் . சிற்றுண்டிகள் செய்து விற்றல் நிறுவனங்களில் சமையல் உதவியாளராக பணியாற்றும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் .

மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் திரு. செ.ஸ்ரீநிவாசன் சமூகசேவை அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. எஸ்.கே.வசந்தன் இலங்கைப்புன்னகை அமைப்பின் தலைவர் திரு க. சர்மிலன் ஆகியோர் நேரில் சென்று (02.06.2017) இன்று மதியம் உதவியுள்ளனர் .

இவ்வாறான பல குடும்பங்கள் சிரமமான முறையில் தமது வாழ்வை நடாத்தி வருகின்றன. எம்மிடம் நாளாந்தம் மாவட்ட சமூக சேவை அலுவலகம் நாடி வந்து உதவி கேட்போர் அதிகம் .புலம் பெயர் நாடுகளில் உள்ள இவ்வகை அமைப்புக்களும் நல் உள்ளங்களும் இன்று இவர்களின் கஸ்டங்களுக்கு பரிகாரம் தேட உதவி வருகின்றனர் . தேவைப்பாடுகள் அதிகம் உள்ளன. விரும்புவோர் தாமாக உதவ முன்வரின் நாம் துன்பத்தில் உள்ளவர்களை இனங்கண்டு கொடுக்க தயாராக உள்ளோம் என மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் தெரிவித்தார் .

 

You might also like