வவுனியா பேருந்து நிலையத் திறப்பு விழாவுக்கு மாகாணசபை உறுப்பினர்கள் புறக்கணிப்பு

வடமாகாணசபையின் 82 ஆம் அமர்வு இன்று(10) இடம்பெற்ற போது இலங்கை மத்திய போக்குவரத்து அமைச்சினால் வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் திறப்பு விழா நிகழ்வுக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படாமைக்கு சபை உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்த அமர்விலே உறுப்பினர்கள் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளதுடன் நிகழ்வை பகிஷ்கரிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் அவர்கள் குறிப்பிடுகையில், வவுனியா மாவட்டத்தில் மத்திய போக்குவரத்து அமைச்சினால் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் எதிர்வரும் 16 ஆம் திகதி திறந்துவைக்கப்பட உள்ளது.

ஆனால் இந்நிகழ்வுக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் அழைக்கப்படவில்லை.

மேலும் வட மாகாண போக்குவரத்து அமைச்சரும் அழைக்கப்படவில்லை. எனவே இந்த நிகழ்வை நாம் பகிஷ்கரிக்க வேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மத்திய போக்குவரத்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது.

You might also like