கிளிநொச்சியில் வெட்டப்பட்ட மாடுகளின் இறைச்சிகளை சுடலையில் புதைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

களவாடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்ட 1800 கிலோ கிராமிற்கு மேற்பட்ட மாடுகளின் இறைச்சி நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய  கிளிநொச்சி திருநகர் சுடலையில் புதைக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

யாழ்ப்பாணத்திலிருந்து சங்குபிட்டி, பூநகரி, மன்னார் ஊடாக புத்தளத்திற்கு கூலர் ரக வாகனத்தில் வெட்டப்பட்ட நிலையில் 38 மாடுகளின் இறைச்சி தலைகளுடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்நிலையில் கிளிநொச்சி, முழங்காவில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வாகனம் சோதனைக்குட்படுத்தப்பட்டு இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் புத்தளம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை  சந்தேகநபர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போதே குறித்த இறைச்சிகளை கிளிநொச்சி திருநகர் சுடலையில் புதைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கரைச்சி பிரதேச சபையினரால் பணியாளர்களைக் கொண்டு இறைச்சி புதைக்கப்பட்டுள்ளது.

மாடுகளை கொள்வனவு செய்ததற்கோ மற்றும் அவற்றை கொண்டு சென்று இறைச்சிக்காக வெட்டியதற்கோ எவ்விதமான சட்டரீதியான ஆவணங்களும் சந்தேக நபர்களிடம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த சந்தேகநபர்கள் இருவரும் தலா இரண்டு இலட்சம் ரூபா மற்றும் இரு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like