கிளிநொச்சியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 1515.07 ஏக்கர் காணிகள் படையினர் ஆக்கிரமிப்பு: எப்போது விடுவிக்கப்படும்?

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் ஆக்கிரமித்துள்ள 1515.07 ஏக்கர் காணிகளில், பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை உடனடியாக விடுவிப்பதாக, படையினர் உறுதியளித்து ஒரு மாதம் கடந்து விட்டபோதும், ஒரு துண்டு காணி கூட இதுவரை விடுவிக்கப்படவில்லை.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் படைத்தளபதிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம்திகதி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் ஆக்கிரமித்துள்ள மக்கள் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது குறித்து இதன்போது முக்கியமாகப் பேசப்பட்டது.

படையினர் ஆக்கிரமித்துள்ள மக்களுடைய காணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் குழு அந்தந்த மாவட்ட செயலகங்கள் ஊடாகவும் நேரடியாகவும் தகவல்களைச் சேகரிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

இதன்பின்னர், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் அரசாங்க அதிபர், படைத்தளபதிகளுடனான சந்திப்பு ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமுள்ள 1515.07 எக்கர் காணியை மக்களிடம் மீள வழங்குவதற்கு படையினர் இணக்கம் தெரிவித்திருந்தனர். எனினும் இதுவரை ஒரு துண்டு காணி கூட கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களிடம் வழங்கப்படவில்லை.

இவ்விடயம் தொடர்பாக, கலந்துரையாடலில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சோ.சிறிதரனிடம், நேற்றுக் கேட்டபோது, “படையினர் உறுதியளித்தவாறு நிலங்கள் சிறிதளவேனும் மக்களிடம் வழங்கப்பட்டதாக நான் அறியவில்லை. கிளிநொச்சி நகரில் வீழ்த்தப்பட்டிருந்த தண்ணீர் தாங்கி மட்டும், கட்டுப்பாட்டிலிருந்து கரைச்சிப்பிரதேச செயலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்றார்.

“மேலும், இரணைமடு படைத்தலைமையகத்தின் கீழ் உள்ள சுமார் 1200 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் எனவும் படையினர் தரப்பிலிருந்து கூறப்பட்டது. ஆனால்,  அது கிளிநொச்சி மாவட்டத்துக்குள் சேராது. அது முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் சேரும்.

“முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்கள் சிலருடன் தொடர்புகொண்டு இது குறித்துக் கேட்டறிந்தேன். காணி விடுவிப்புக்கான எந்த அறிவித்தலும் வழங்கப்படவில்லை என அவர்கள் கூறினர்” என, சிறிதரன் குறிப்பிட்டார்.

You might also like