ஊழல்குற்றச்சாட்டுகள் தொடர்பில் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடும் இணையத்தளங்களை வன்மையாக கண்டிக்கின்றேன்

வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முதலமைச்சர் அவர்களினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவினது அறிக்கை என்னிடம் கையளிக்காத நிலையில் அறிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு செய்தியை நான் வழங்கியதாக சில இணையத்தளங்களில் செய்தி வெளியாகியமையை வன்மையாக கண்டிப்பதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சரின் ஊடகப்பிரிவினால் இன்று (06.06.2017) வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த மாதம் 22ம் திகதியிலிருந்து 31ம் திகதிவரை ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு ஜெனீவாவில் தங்கியிருந்தேன். இந்த நிலையில் மாநாடு முடிவடைந்ததும் அங்கிருந்து நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் அந்நாட்டு வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகளைச் சந்திப்பதற்காகவும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ள நீண்டகால அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்களை அந்நாட்டில் வதியும் தாயக மருத்துவர்களைச் சந்தித்து கலந்தரையாடும்பொருட்டு தற்போது நோர்வேயில் தங்கியுள்ளேன்.

இந்த நிலையில் முதலமைச்சர் அவர்களால் விசாரணை அறிக்கை அமைச்சர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டேன். இதுவரையில் எனக்கான அறிக்கை முதலமைச்சர் அலுவலகத்தால் என்னிடம் கையளிக்கப்படாத நிலையில் அறிக்கையின் உள்ளடக்கங்களை நானே ஊடகங்களுக்கு வழங்கியதாக உண்மைக்கு புறம்பான செய்திகள் சில இணைத்தளங்களில் வெளியாகி இருப்பது வேடிக்கையாக உள்ளது. தொடர்ந்தும் என்மீது வீண்பழிசுமந்தும் வகையில் திட்டமிட்டு சிலரால் மேற்கொள்ளப்படும் இந்த பிரச்சாரத்தை முற்றாக மறுக்கின்றேன் இதுதொடர்பில் பூரணமான தன்னிலை விளக்கமொன்றை நாடுதிரும்பியதும் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கவுள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like