பளை துப்பாக்கிப் பிரயோக சம்பவம் – முன்னாள் போராளிக்கு தொடர்பில்லை

பளை பிரதேசத்தில் கடந்த மே மாதம் 19 ஆம் திகதி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட புலிகளின் முன்னாள் போராளிக்கும் சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அஜித் அல்லது சோழன் என அழைக்கப்படும் மூர்த்தி விஜய கணேஷ் என்பவர் கடந்த 3 ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

விசாரணைகளின் பின்னர் நேற்று முன்தினம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பளை கச்சாவெளி சந்தியில் போக்குவரத்து பணிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் வாகனம் மீது கடந்த மே மாதம் 19 ஆம் திகதி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து பயங்கரவாத விசாரணைப் பிரிவின் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில், இலக்கம் 108 கே.கே.எஸ்.வீதி கொக்குவில், யாழ்ப்பாணம் என்ற முகவரியை சேர்ந்த கிருபானந்தன் மூர்த்தி விஜய கணேஷ் என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

இவர் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் அவர் விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்து, பின்னர் இராணுவத்திடம் புனர்வாழ்வு பயிற்சி பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

அத்துடன் அவர் தற்போது சாரதி பயிற்சி நிறுவனம் ஒன்றில் இடைத்தரகராக பணியாற்றி வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் மூர்த்தி விஜய கணேஷூக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து விஜய கணேஷ் கிளிநொச்சி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like