பாரிய ரயில் விபத்தை தடுத்து நிறுத்திய இளைஞன்! பல மனித உயிர்கள் தப்பின

அனுராதபுரத்தில் ஏற்படவிருந்த பாரிய ரயில் விபத்தை தடுத்த இளைஞர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மூன்றாம் திகதி ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் ஒன்று, தனுஷ்க சேரம் என்ற இளைஞரால் தடுக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரத்திற்கு சுற்றுலா சென்ற குறித்த இளைஞர், ரயில் நிலையத்திற்கு சென்றிருந்தார்.

இதன்போது ரயில் வீதியின் தண்டவாளத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளமையை அவர் அவதானித்துள்ளார்.

இது குறித்து ரயில் நிலைய அதிகாரியிடம் அறிவித்துள்ளார். இதன் காரணமாக ஏற்படவிருந்த பாரிய ரயில் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.

ரயில்கள் மீது அதிக விருப்பம் கொண்ட குறித்த இளைஞர் ஜெர்மன் நிறுவனம் ஒன்றில் பொறியியல் கற்கை நெறிகளை மேற்கொண்டுள்ளார்.

அனுராதபுரம் ரயில் நிலையத்திற்கு வருகைத்தந்த M4 ரக இயந்திரத்தை திருப்புவதற்காக கொண்டு செல்லும் போது அதன் நிறையை தாங்கி கொள்ள முடியாமல் தண்டவாளம் இவ்வாறு உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இதனை அறிந்து உடனடியாக அறிவித்தமையினால் நூற்றுக்கணக்கானவர்களின் உயிர்களை காப்பாற்ற முடிந்துள்ளதாக ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இளைஞனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

You might also like