முதலமைச்சர்களுக்கு கிரீடம் சூட்டுவதை நிறுத்தி விட்டு குற்றங்கள் விவாதிக்கப்பட வேண்டும்

முதலமைச்சர்களுக்கு கிரீடம் சூட்டுகின்றதை நிறுத்திவிட்டு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை உரிய முறையில் விவாதித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வட மாகாண அமைச்சர்கள் இருவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை இன்று (07) வடமாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த அறிக்கை நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட இருந்த போதும், தவிர்க்க முடியாத காரணத்தால் இன்றைய தினத்துக்கு பிற்போடப்பட்டது.

இந்த நிலையில், அறிக்கையை முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று சபையில் சமர்ப்பித்தார்.

இதையடுத்து, குறித்த அறிக்கையை எப்போது விவாதத்துக்கு எடுத்துக்கொள்வது என்பது குறித்து உறுப்பினர்களிடையே கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடல்களின் அடிப்படையில், எதிர்வரும் 14 ஆம் திகதி குறித்த அறிக்கையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்கள் எதிர்வரும் 10ஆம் திகதி விளக்கமளிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சபையில் இவற்றினை விவாதிக்காமல் தமது கருத்துக்களை எழுத்து மூலம் வழங்குமாறும், அவற்றினை ஆராய்ந்து முதலமைச்சர் தனது முடிவினை அறிவிக்க வேண்டும் எனவும் லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறல் இன்றி முதலமைச்சரின் தலையில் சுமத்தாது, அனைத்து உறுப்பினர்களும் விவாதிப்பதே சிறந்தது.

அறிக்கையினை விவாதிக்கும் போது எல்லோரும் கதைத்தால் குழுவினருடைய அறிக்கையினை நலிவடையச் செய்யும் எனவே, அதற்குரிய நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுக்க வேண்டும்.

அரசியலமைப்பினால் முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமை எனவும் அவைத் தலைவர் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்களை எவ்வாறு கையாளப் போகின்றோம் என பொது மக்கள் எதிர்பார்த்திருக்கின்றார்கள். பொது மக்களின் நம்பிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் உண்மைத் தன்மையினை வெளிப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. குற்றச்சாட்டுக்களை எமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள். வெளிப்படைத் தன்மையாக நடந்து கொள்ள வேண்டுமாயின், என்னால் பல தீர்மானம் எடுக்க முடியும். எனவே, உறுப்பினர்கள் தமது கருத்துக்களை பரிமாற்ற வேண்டுமென முதலமைச்சர் வலியுறுத்தினார்.

முதலமைச்சரின் தலையில் போட்டுவிட்டு தாம் தப்பித்துக்கொள்ள நினைக்கின்றார்கள். முதலமைச்சர்களுக்கு கிரீடம் சூட்டுகின்றதை நிறுத்திவிட்டு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை உரிய முறையில் விவாதித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 14 ஆம் திகதி புதன்கிழமை கருத்துப் பரிமாற்ற விசேட அமர்வில் விவாதிக்கப்பட்டதன் பின்னர் முதலமைச்சர் இறுதி முடிவினை அறிவிப்பார் எனக் கூறி அவைத் தலைவர் சபையினை ஒத்திவைத்தார்.

You might also like