வவுனியாவில் சிறைக் கைதி கொலைச் சம்பவம்! சாட்சிகளின் வாக்குமுலத்தை பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக, வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை அடித்துக்கொலை செய்த சம்பவம் தொடர்பாக உடனடியாக சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் தருமபுரம் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் கடந்த மாதம் கசிப்பு உற்பத்தி தொடர்பில் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்த தருமபுரம் பொலிசார், குறித்த மூன்று சந்தேக நபர்களையும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

இந்தநிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த மூவரும் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதில் கிளிநொச்சி தருமபுரம் பகுதியைச் சேர்ந்த எஸ்.மகேந்திரன் (வயது- 32) என்பவர் சுகயீன முற்றதாக தெரிவித்து வவுனியா பொது வைத்தியசாலையில் கடந்த 31ம் திகதி அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த குறித்த கைதியை வவுனியா சிறைச்சாலையில் வைத்து சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் நான்கு பேரும் ஏற்கனவே சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் பலரும் கைகளை கட்டி வைத்து தாக்கியதாகவும் இதனால் குறித்த நபர் உயிரிழந்ததாகவும் உயிரிழந்தவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய இரண்டு சந்தேக நபர்களும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் கடந்த திங்கட்கிழமை வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.

இதனை கவனத்தில் எடுத்த நீதிமன்று சந்தேக நபர்களான இரு சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு பொலிசாருக்கு கட்டளையிட்டதுடன் நேற்று (07-06-2017) தவணையிட்டிருந்தது,

நேற்றைய தினம் (07-06-2017) பிற்பகல் 2.00 மணிக்கு குறித்த வழக்குகளுடன் தொடர்புபட்ட மூன்று சந்தேக நபர்களில் உயிரிழந்த சந்தேக நபர் தவிர்ந்த இரண்டு சந்தேக நபர்களும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா அவர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது குறித்த இரண்டு சந்தேகநபர்களும் தங்களுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த நபர் வவுனியா சிறைச்சாலையில் சிறைக்காவலர்களாலும் அங்குள்ள சில சிறைக்கைதிகளாலும் கடுமையாக தங்களின் கண்முன்னால் தாக்கப்பட்டதாகவும் அதனாலேயே அவர் உயிரிழந்ததாகவும் சாட்சிகள் மன்றில் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த இரண்டு பேரினது வாக்குமூலங்களை பதிவு செய்து மாற்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தருமபுரம் பொலிசாருக்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டதுடன் எதிர்வரும் 22ம் திகதி தவணையிடப்பட்டுள்ளது.

இதேவேளை உயிரிழந்த சந்தேகநபர் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுடிருந்தபோது வவுனியா சிறைச்சாலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கைதிகளால் தாக்கப்படுதாகவும் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறும் நீதிமன்றில் கோரியதாகவும் இதனையடுத்து, உயிரிழந்த சந்தேக நபரை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டபோதும் வவுனியா சிறைச்சாலையில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டபோதே இவ்வாறு துன்புறுத்தப்பட்டு கொலை செய்துள்ளதாகவும் சாட்சிகள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி மன்றில் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like