கிளிநொச்சியில் ரூ. 53 மில்லியன் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது

கிளிநொச்சி, திருநகரில் அமைந்துள்ள கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றம் என்ற பெயரில், கடந்த ஆட்சிக்காலத்தில் சுமார் 53 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி, முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி திருநகரில் அமைந்துள்ள கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றம் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகின்றபோதும், கடந்த ஆட்சிக்காலத்தில் தற்போதும் தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்றும் குறித்த மன்றத்தினை வடக்கு மாகாண கல்வி அமைச்சிடம் ஒப்படைக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற பல்வேறு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டங்களில் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது.

இதேவேளை இதற்கான நிதியொதுக்கீட்டின் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் மாகாணசபை உறுப்பினர்கள் நாடாளுமன்ற  உறுப்பினர் ஆகியோரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இது தொடர்பான முழுமையான விளக்கத்தை கோரி கரைச்சி பிரதேச செயலாளருக்கு கடந்த ஒக்டோபர் மாதம் 14ஆம்திகதி  கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தார்.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை கடந்த டிசம்பர் மாதம் கடிதம் ஒன்றினையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த விடயங்கள் தொடர்பில் கரைச்சிப்பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன்,

குறித்த பண்பாட்டு மன்றம் அமைந்துள்ள கட்டடங்கள் முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளால் கட்டப்பட்டு கூரையின்றி சேதமடைந்த நிலையில் காணப்பட்டது என்றும் கடந்த 2011ஆம் ஆண்டு ‘என்றிப்’ திட்டத்தின் கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாரின் சிபார்சுகளுக்கு அமைவாக புனரமைக்கப்பட்டது.

இது தொடர்பான கணக்கு நடைமுறைகள் எவையும் பிரதேச செயலகத்தில் இல்லை. இந்த மன்றத்திற்கு பிரதேச செயலகம் எந்த நிதிப்பங்களிப்பையும் செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நூறு மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டின் கீழ் இசைக்கருவிகளை கொள்வனவு செய்வதற்கு இரண்டு மில்லியன் ரூபாவும் அலுவலக தளபாடங்களுக்காக இரண்டு மில்லியன் ரூபாவும் கணித வள நிலைய அமைப்பிற்கு இரண்டு மில்லியன் ரூபாவும் இதனைவிட இருபத்தி ஐந்து மில்லியன் ஒதுக்கீட்டின் கீழ் கணித விஞ்ஞான வள நிலையத்தின் பொருட்களின் கொள்வனவிற்கு ஒன்பது இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவும் என 53 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது என்றும் இதனைவிட ஒலிபெருக்கி சாதனங்கள் இசைக்கருவிகள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

என்றிப் திட்டத்தின் நிதிதொடர்பில் எதுவும் பிரதேச செயலகத்திற்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தின் நிர்வாகத்தை சேர்ந்த தலைவர் எனக்குறிப்பிட்டு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு திங்கட்கிழமை (09)அனுப்பிவைத்துள்ள கடிதத்தில்,

2011ஆம் ஆண்டு என்றிப் திட்டத்தின் கீழ் முதற்தடவை ஐந்து மில்லியன் ரூபாவிலும் அதன் பின்னர் 4.7 மில்லியன் ரூபாவிலும் குறித்த மன்றம் இயங்கி வரும் கட்டடம் கூரையின்றி காணப்பட்ட நிலையில் புனரமைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு என்றிப் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 9.7 மில்லியன் ரூபா நிதி தொடர்பில் பிரதேச செயலக அனுமதிகள் எதுவுமின்றி முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் இதனை விட அபிவிருத்தி என்ற போர்வையில் பெருமளவான நிதி முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில்  உரிய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தில் நிறுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like