திருகோணஸ்வரம் ஆலயத்திற்கு இராவணன் அன்பளிப்புச் செய்த மான் பரம்பரைக்கு ஆபத்து!

திருகோணமலை நகருக்கு செல்லும் எவரும் மனிதர்களுடன் மான்கள் சுற்றி திரிவதை காண முடியும்.

குறிப்பாக கோணேஸ்வரம் ஆலயத்திற்கு செல்லும் வழியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள், அருகில் சுற்றி திரியும் மான்கள் கூட்டத்தை கண்டு பெரும் மகிழ்ச்சியடைவதாக கூறியுள்ளனர்.

சிவ பக்தனான மன்னன் இராவணன், சிவாலயமான கோணேஸ்வரம் ஆலயத்திற்கு அன்பளிப்புச் செய்த மான் ஜோடியின் பரம்பரையே திருகோணமலை நகரில் வாழ்ந்து வருகின்றன என்பது இந்துக்களின் நம்பிக்கை.

திருகோணமலை நகரில் பேட்ரிக் கேட்டை கட்டிய ஒல்லாந்தர், கோட்டைக்கு அருகில் சுற்றி திரியும் மான்களுக்கு உணவுகளை கொடுத்து வந்ததால், இங்குள்ள மான்கள் நீண்டகாலமாக மனிதர்களுடன் வாழ பழகிக்கொண்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும், விலங்குள் குறித்து ஆய்வு நடத்துவோரும் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை நகரில் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் இந்த மான் பரம்பரையின் வரலாறு எதுவாக இருந்தாலும் தற்போது அவற்றின் வாழ்க்கை மிகவும் கவலைக்குரியதாக மாறி விட்டது என சுற்றாடல் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

நகரில் மான்களின் வாழ்விடங்களாக இருந்த இடங்களில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால், அவை தமது வாழ்விடங்களை இழந்துள்ளன.

மனிதர்களின் சுற்றாடல் அழிப்பானது மான்களின் அழிவுக்கு காரணமாகி வருகிறது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள திருகோணமலை கோணேஸ்வர சுற்றாடல் அமைப்பின் தலைவர் அனுர பண்டார, போருக்கு பின்னர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் திருகோணமலைக்கு வருகின்றனர்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் மான்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை.

உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் லஞ்ச் சீட் மற்றும் பொலிதீன்களை ஆங்காங்கே போடுகின்றனர். இவற்றை உண்ணும் மான்கள் அதிகளவில் சுகவீனமடைந்து இறந்து போகின்றன.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் திருகோணமலை நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மான்கள் இருந்தன. தற்போது 200 மான்கள் கூட இல்லை. இன்னும் கொஞ்சம் நாளில் மான்கள் முற்றாக அழிந்து விடும் எனக் கூறியுள்ளார்.

அதேவேளை இறந்து போகும் மான்களின் குடலில் மூன்று முதல் நான்கு கிலோ வரையான பொலிதீன்கள் இருப்பதாக திருகோணமலை வனஜீவராசிகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கலாநிதி. லலித் குமாரகே தெரிவித்துள்ளார்.

பொலிதீன் ஜீரணிப்பதில்லை. இதனால் மான்கள் இறந்து விடுகின்றன. மான்களுக்கு உண்ண வேறு எதுமில்லை. இந்த விலங்குகளை அவற்றுக்கு பொருத்தமான சூழலில் கொண்டு சென்று விட வேண்டும்.

எனினும் பௌத்த பிக்குமார் அதனை எதிர்க்கின்றனர். பொலிதீன்களை எறியாதீர்கள் என நாங்கள் நகரம் முழுவதும் அறிவிப்பை காட்சிப்படுத்தியுள்ளோம். உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த அறிவிப்பை மதிப்பதில்லை. நிலைமை இப்படி சென்றால் ஒரு மான் கூட எஞ்சாது என லலித் குமாரகே குறிப்பிட்டுள்ளார்.

You might also like