அரசியல்வாதிகள் மக்களை குழப்புகின்ற வகையில் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர் : சாந்தி சிறிஸ்கந்தராஜா

சில தோற்றுப்போன அல்லது மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் அரசியல்வாதிகள் மக்களை குழப்புகின்ற வகையில் பிரச்சாரங்களை செய்வதனால் தான் மக்கள் கூட்டமைப்பை விமர்சிக்கின்ற ஒரு நிலை காணப்படுகிறது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது மக்கள் மத்தியில் எழுந்துள்ள விமர்சனங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

என்னைப் பொறுத்த வரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீதான விமர்சனம் என்பது மக்கள் விமர்சிக்கின்றார்களா அல்லது மக்களை விமர்சிக்க வைக்கின்றார்களா என்ற ஒரு கேள்வியை நான் இங்கு முன்வைக்கின்றேன். ஏனென்றால் இந்தக் கூட்டமைப்பு மீது மக்கள் நம்பிக்கை வைத்தமையால் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆணை வழங்கியிருக்கிறார்கள். ஆனால் கூட்டமைப்பு அதில் இருந்து நழுவிப் போகவில்லை. அத்துடன் துரோகம் செய்யவில்லை என்பதும் உண்மை.

எங்கள் மக்கள் ஏற்றுக் கொள்ளாத, எங்களுடைய மக்களுக்கு திருப்தியளிக்காத எந்தவொரு தீர்மானத்தையும் கூட்டமைப்பு ஏற்றுப் கொள்ளாது என எங்களுடைய சம்மந்தன் ஐயா அடிக்கடி கூறுவார். இந்த ஆட்சி மாற்றத்தின் பின்பு தான் தமிழர்களைப் பொறுத்தவரையில் இரண்டு காரியம் கைகூடியிருக்கின்றது. இலங்கையின் இரண்டு பெரும்பான்மை பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து இருப்பது. இரண்டாவது சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஐக்கியநாடுகள சபையின் மனிதவுரிமை பேரவை ஊடாக நடவடிக்கைகளை எடுத்தது. இதனை மக்கள் நன்றாக விளங்கிக் கொண்டு சரியாக கையாள வேண்டும். இதைக் குழப்புகின்ற வகையில் சில தோற்றுப்போன அல்லது மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் அரசியல்வாதிகள் மக்களை குழப்புகின்ற வகையில் பல பிரச்சாரங்களை செய்வதனால் தான் மக்கள் கூட்டமைப்பை விமர்சிக்கின்ற ஒரு நிலை காணப்படுவது தான் உண்மை.

You might also like