கிளிநொச்சி – கல்லாறு பகுதியில் ஆயுத முனையில் நான்கு இலட்சம் ரூபா உட்பட நகைகள் கொள்ளை

கிளிநொச்சி – கல்லாறு பகுதியில் ஆயுத முனையில் நாற்பது பவுன் நகை மற்றும் நான்கு இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் கல்லாறு பகுதியில் இன்று (11) இடம்பெற்றுள்ளது.

கல்லாறு பகுதியில் உள்ள தனியார் வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து உட்சென்ற குழு ஒன்று அங்கிருந்த கடை உரிமையாளர் மற்றும் அங்கு தங்கியிருந்த நபர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அங்கு இருந்த பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட குழுவினர், கடை உரிமையாளரை அவரது வீட்டிற்கு ஆயுத முனையில் அச்சுறுத்தியவாறு அழைத்து சென்றுள்ளனர்.

குறித்த பாதிக்கப்பட்டவர்களின் அலறல் கேட்டு வீட்டார் கதவை திறக்கும் முன்னர் வீட்டின் பின் கதவை உடைத்து உட்சென்ற குழுவினர் அங்கிருந்த பெண்கள் சிறுவர்களை அச்சுறுத்தி காதில் இருந்த தோடு உட்பட அனைத்து தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டுள்ளனர்.

அயலவர்களின் உதவியை பெற்றுக்கொள்ள முயற்சித்த போதிலும் வருகை தந்திருந்த குழுவினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 40 பவுணுக்கு அதிக பெறுமதியான தங்க ஆபரணங்கள், நான்கு இலட்சம் ரூபா பணம் என்பவை அந்த குழுவால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வீட்டார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like