கட்டுப்பாட்டு விலைக்கு மக்களிற்கு மணல் வழங்குமாறு கோரி கிளிநொச்சியில் போராட்டம்

கிளிநொச்சியில் கட்டுப்பாட்டு விலைக்கு மக்களிற்கு மணல் வழங்குமாறு கோரி சமூக நீதிக்கும் சமத்துவத்திற்குமான மக்கள் அமைப்பு இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளது.

குறித்த போராட்டத்தின் போது மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீட்டுதிட்டத்திற்காக தமக்கு வழங்கப்படும 5 லட்சத்து ஐம்பதாயிரத்தில் பெரும்பகுதி பணம் மணல் கொள்வனவிற்கு செலவாகின்றதாகவும், 8000 ரூபா வரை செலுத்தி தேவையான மணலை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாகவும் இதனால் தமது வீட்டுத்திட்டத்தினை முழுமைப்படுத்த முடியாதுள்ளதாக போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இவ்விடயம் குறித்து அரசாங்க அதிபர் கட்டுப்பாட்டு விலைக்கு மக்களிற்கு மணல் வழங்குவதற்கு கூட்டுறவு சபைகளிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், எனினும் குறித்த பிரச்சினை தொடர்பில் தான் தொடர்ந்தும் அவதானித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்,

கடந்த காலங்களில் திட்டமிட்டு மக்களிற்கு குறைந்த செலவில் மணல் வழங்கப்பட்டுள்ளது.

நாங்கள் இணை தலைவர்களாக செயற்பட்டபோது பொருத்தமற்ற பகுதிகளில் மண் அகழப்படுவதையும், அனுமதியற்ற முறையில் மணல் சூரையாடப்படுவதையும் கட்டுப்படுத்தியிருந்தோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் மகேஸ்வரி நிதியம் தொடர்பில் தன்னிடமல்ல ஈபிடிபி டக்ளஸ் தேவானந்தாவிடம் கேள்விகளை எழுப்புமாறும், தான் தற்போது ஈபிடிபியில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like