கிளிநொச்சியில் இரத்த வங்கியின் சேவையை பெறவேண்டிய நோயாளர்கள் பெரும் பாதிப்பு

கிளிநொச்சி பொதுவைத்தியசாலையின் இரத்த வங்கியில் போதிய வைத்தியர்கள் இன்மையால் சாதாரண குருதிச் சோகை நோயாளிகளைக் கூட யாழ் போதானா வைத்தியசாலைக்கு மாற்ற வேண்டிய நிலை காணப்படுவதாக தெரிவருகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கும் இதனைவிட முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு இலட்சம் வரையான மக்களுக்குமான மருத்துவ சேவையை வழங்கும் ஒரே ஒரு வைத்தியசாலையான கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் இரத்த வங்கி போதிய வைத்தியர்கள் இன்றி இயங்கி வருகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனால் இரத்த வங்கியின் சேவையை பெறவேண்டிய நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் உள்ள ஏனைய வைத்தியசாலைகளுக்கான குருதி வகைகளை வழங்க வேண்டிய பிரதான இரத்த வங்கியாக காணப்படுகின்ற மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நான்கு வைத்தியர்கள் கடமையாற்ற வேண்டிய நிலையில் தற்போது ஒரே ஒரு வைத்தியர் மாத்திரம் கடமையாற்றி வருகின்றார் என தெரியவந்துள்ளது.

இதனால் இரத்த வங்கியில் தற்போதுள்ள குறித்த வைத்தியர் தனது சேவையை 24மணி நேரம் வழங்கவேண்டிய நெருக்கடி நிலை காணப்படுகின்றது.

இவ்வாறு போதிய வைத்தியர்கள் இன்மையால் குருதிச் சோகையுள்ள நோயாளிகளைக் கூட நோயாளர் காவு வண்டிகள் மூலம் யாழ்ப்பாணம் மற்றும் வெளிமாவட்ட வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்படுவதாகவும் இதனால் இரத்த மாற்று சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும்

தேரிவித்துள்ளதுடன் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்படுவதனால் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் திரும்பிச் செல்லும் நிலையும் காணப்படுகின்றது.

எனவே குறித்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like