கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குரிய காணியின் ஒரு பகுதியை தனியாருக்கு வழங்க முடியாது

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்குரிய காணியின் ஒரு பகுதியை தனியாருக்கு வழங்க முடியாது என்றும் வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி கருதி அனைத்து பொறுப்புள்ள அதிகாரிகளும் செயற்பட வேண்டும் எனவும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அண்மையில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை கடந்த 2003ம் ஆண்டுக்கு முன்னைய காலப்பகுதியில் பழைய வைத்தியசாலை வளாகத்திலேயே இயங்கி வந்துள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே 1984ம் ஆண்டு தற்போது வைத்தியசாலை அமைந்துள்ள காணி வைத்தியசாலைக்கென ஒதுக்கப்பட்டு குறித்த காணிகளில் அத்துமீறி குடியிருந்தவர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டு வைத்தியசாலைக்குரிய காணியாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து கடந்த 2003ம் ஆண்டு வடக்கு கிழக்கு சமுதாய மீளமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் அப்போதைய ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தடோசினோ அவர்களால் 2003ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் திகதி அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டதை அடுத்து வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு 2004ம் ஆண்டு முதல் வைத்தியசாலை தற்போதைய இடத்தில் இயங்கி வருகின்றது.

இந்நிலையில் வைத்தியசாலை வளாகத்தில் ஒரு பகுதியில் உள்ள காணித்துண்டினை தனியார் ஒருவர் உரிமை கோரியதை அடுத்து குறித்த காணித்துண்டினை தனியாருக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை கரைப் பிரதேச செயலாளர் மேற்கொண்டுள்ளார் என பல்வேறு தரப்புக்களாலும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை மேலும் குறிப்பிடுகையில்,

குறித்த காணி முழுமையாகவே வைத்தியசாலைக்குரிய காணியாகவே உள்ளது. 1984ம் ஆண்டு காணி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் இருந்தவர்களுக்கு மாற்றுக்காணிகள் இழப்பீடுகள் வழங்கப்பட்டன.

இப்போது வைத்தியசாலைக்குரிய வரைபடத்திலுள்ள காணியை யாருக்கும் வழங்குவதற்கு அதிகாரிகள் துணைபோகக்கூடாது.

மாவட்ட பொது வைத்தியசாலையில் எதிர்கால அபிவிருத்தியை கருத்திற்கொள்ள வேண்டும். குறிப்பாக காது தொண்டை கண் விபத்;துப்பிரிவு போன்ற பிரிவுகள் அதற்கான

நோயாளர்கள் விடுதிகள் என பல்வேறு அபிவிருத்திகள் அமையவேண்டிய நிலையில் காணிகளை விரும்பியது போன்று யாருக்கும் வழங்கமுடியாது என குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவத்த கரைச்சிப்பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன்,

ஆனந்தபுரம் பகுதியில் உள்ள குறித்த வைத்தியசாலை காணியின் குறித்த ஒரு பகுதிக் காணி தனது காணி என தனியார் ஒருவர் உரிமைகோரியுள்ளார்.

இது தொடர்பாக மாகாண காணி ஆணையாளர், பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆகியோரிடம் அனுமதியைப் பெற்றுக்காணியை வழங்கப்பட்டது. ஆனால் காணிக்கான உரிமம் எதுவும் வழங்கப்படவில்லை. குறித்தகாணி தொடர்ந்தும் வைத்தியசாலையின் பராமரிப்பிலேயே உள்ளது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like