யாழ். கர்ப்பிணிப் பெண் படுகொலை: மாற்றுத்திறனாளி சிறுவனின் குடும்பத்திற்கு ஏற்பட்ட நிலை

யாழ். ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் ஹம்சிகாவின் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் கண் கண்ட சாட்சியின் குடும்பத்தாரிடம் பேரம் பேசியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரு சகோதரர்களின் விளக்கமறியலையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை நீடித்ததுடன், சந்தேகநபர்கள் பேரம் பேசியமை குறித்து விசாரணை நடத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கண் கண்ட சாட்சியாக மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவர் உள்ளார். குறித்த சிறுவனின் உறவினர்களிடமே சந்தேகநபர்களான இரு சகோதரர்களும் பேரம் பேசியுள்ளனர்.

அடையாள அணிவகுப்பில் தங்களை அடையாளம் காட்டாதுவிட்டால் மாற்றுத்திறனாளி சிறுவனின் குடும்பத்திற்கு 5 இலட்சம் ரூபா பணம் வழங்குவோம் என்று பேரம் பேசி உள்ளனர்.

“சிறுவனின் உறவு முறையை சேர்ந்த ஒருவர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார். அதனை அறிந்த சந்தேக­நபர்கள் சிறுவனின் உறவுக்காரருடன் பேரம் பேசியுள்ளனர். அவர் அதனை சிறுவனின் தாயாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்” என்று பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.

இதனை அடுத்து பேரம் பேசப்பட்ட சிறுவனின் உறவுக்காரிடம் பொலிஸார் வாக்குமூ­லத்தை பதிவு செய்து அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கு மாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like