பதவியை இராஜினாமா பண்ணவில்ல என்கிறார் குருகுலராஜா

அமைச்சுப் பதவியை தான் இராஜினாமா செய்யவில்லை என வட மாகாண கல்வி அமைச்சர் தியாகராசா குருகுலராசா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண சபையின் இரண்டு அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபையில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, மாகாண கல்வி அமைச்சர் தியாகராசா குருகுலராசா மற்றும் அவரது ஊழலுக்கு உடந்தையாக செயற்பட்ட அமைச்சின் செயலாளர் ஆகியோர் பொறுப்புக்களில் இருந்து விலக்கப்பட வேண்டும் என முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு பரிந்துரைத்திருந்தது.

மூவரடங்கிய விசாரணைக்குழுவின் அறிக்கையில் வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மீதான குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வட மாகாண கல்வி அமைச்சர் தனது இராஜினாமாக் கடிதத்தை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் கையளித்துள்ளதாக கொழும்பு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இது தொடர்பாக கருத்து வெளியிடும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்

You might also like