வவுனியாவில் சமுர்த்தி வீட்டுத்திட்டம் விசாரணைகள் முற்றாக இடம்பெறவில்லை

வவுனியாவில் சமுர்த்தி வீட்டுத்திட்டத்தில் இடம்பெற்ற விசாரணைகள் முற்றாக இடம்பெறவில்லை எனவும் இடமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்தும் புளியங்குளம் தெற்கு கிராமசேவையாளர் பிரிவு மக்கள் இன்று வவுனியா மாவட்ட செயலக அரசாங்க அதிபரை சந்திக்க சென்றுள்ளனர்.

வவுனியா புளியங்குளம் பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டிற்கு பிற்பாடு யுத்தம் நிறைவுற்ற பின்னர் அப்பகுதியில் குடியேற்றப்பட்ட பொது மக்களுக்கான வீட்டுத்திட்டம் குறிப்பாக சமுர்த்தி வீட்டுத்திட்டத்தில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பாக பல முறைப்பாடுகளை அப்பகுதி மக்கள் நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு எதிராக தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த மக்கள் தெரிவிக்கையில்,

வீட்டுத்திட்டத்தில் இடம் பெற்ற முறைகேடுகள், ஊழல் தொடர்பாக அரச மட்டத்தில் இடம்பெற்ற விசாரணைகள் திருப்தியளிக்கவில்லை. மாறாக உத்தியோகத்தர்கள் வவுனியா மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அது தொடர்பான விசாரணைகள் முடிவிற்கு வரவில்லை. இன்று வரையில் எமது வீட்டுத்திட்டம் தொடர்பான பிரச்சினைகள் முடிவிற்குக் கொண்டுவரப்படவில்லை.

எமக்கு நியாயம் கிடைக்கவில்லை மீள் குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படும் வீட்டுத் திட்டத்தில் தம்மை புறக்கணிப்புச் செய்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் மக்கள் வெளியிட்ட குற்றச்சாட்டுக்களாவன,

எமது பகுதியில் இரண்டு அங்கத்தவர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது ஜந்து அங்கத்தவர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை.

வவுனியாவில் வசிப்பவர்களுக்கு புளியங்குளத்தில் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. புளியங்குளத்தில் யுத்தத்தின் பின்னர் குடியேறிய எமக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை.

சமுர்த்தி வீட்டுத்திட்டத்தில் ஒரு இலட்சம் ரூபா எமது வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது ஆனால் 40ஆயிரம் ரூபாவிற்கு வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இன்னும் பலரிற்கு சமுர்த்தி வீட்டுத்திட்டத்திற்கான கல், மணல் பறிக்கப்பட்டு புல் வளர்ந்து அப்பகுதி காட்சியளிக்கின்றது இன்று வரையும் வீடு கட்டி முடிக்கப்படவில்லை.

உத்தியோகத்தரை இடமாற்றம் செய்துள்ளதுடன் சமுர்த்தி வீட்டுத்திட்டம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது. தற்போது மீள் குடியேற்ற அமைச்சினால் வழங்கப்பட்ட விண்ணப்பத்தில் 31பேருக்கே வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் 51 பேருக்கு மேல் வீடுகள் இன்றி வசித்துவருகின்றார்கள். வசதியானவர்களும் வெளிநாட்டில் வசிப்பவர்களுமே வீட்டுத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளனர்.

ஒரே வீட்டில் மூன்று பேருக்கு வீட்டுத்திட்டம் கிடைத்துள்ளது. போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்திப்பதற்குச் சென்றவர்கள் அரசாங்க அதிபர் இன்றி அங்கிருந்த அலுவலக உதவியாளரிடம் தமது ஆவணங்களைச் சமர்ப்பித்து விட்டு திரும்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like