மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடரும் அவலம்: கவனம் செலுத்த கோரிக்கை

மட்டக்களப்பில் காய்ச்சல் காரணமாக பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகள் தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் காரணமாக குறித்த மாணவி உயிரிழந்துள்ளதாக வைத்திய பிரிவினால் தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும் மாணவியின் மரணம் தொடர்பில் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை தெரிவித்துவரும் நிலையில் இவ்வாறான மரணச்சம்பவங்கள் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டே வருகின்றன.

மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு சுகமடைந்துவந்த நிலையில் வீடு செல்லமுடியும் என வைத்தியர்கள் தெரிவித்திருந்த நிலையில் குறித்த மாணவி உயிரிழந்தமை மாணவியின் குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் என்ன நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது கூட கண்டுபிடிக்கப்படாத நிலையே இருந்துவருவதாக கவலை தெரிவித்துள்ள அவர்கள் தமது சகோதரியும் அவ்வாறே உயிரிழந்துள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

இன்று விஞ்ஞானமும் வைத்திய துறையும் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ள நிலையிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நோயினை கண்டறியும் வசதிகள் அதிகளவில் உள்ளபோதிலும் இவ்வாறான மரணங்கள் ஏற்படுவதன் காரணம் என்ன என பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

கடந்த காலத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என்பது கேள்விக்குறியாகவேயுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிலமைகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் பாராமுகமாகவே இருந்துவருவது குறித்து பல்வேறு தரப்பினராலும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை நிகழ்வுகளுக்கு அழைக்காமல்விட்டாலும் திறப்பு விழாக்களுக்கு அழைக்காமல்விட்டாலும் அதிகாரிகளை புரட்டியெடுக்கும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசியல்வாதிகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொடர்பில் கவனம் செலுத்தாமல் இருப்பது தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தகால யுத்த சூழ்நிலையின்போது பலரது உயிர்களை காப்பாற்றுவதற்கு அர்ப்பணிப்புமிக்க சேவையாற்றிய மட்;டக்களப்பு போதனா வைத்தியசாலை இன்று பலரது உயிர்களை எடுக்கும் இடமாகமாறிவருவது தொடர்பில் சுகாதார அமைச்சினால் முழுமையான விசாரணைக்குட்படுத்தவேண்டியது அவசியமாகும்.

அதற்கான அனைத்து வழிகளிலுமான அழுத்தங்களை வழங்கவேண்டிய பொறுப்பு மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகளுக்கு உள்ளது என்பதையும் பொதுமக்கள் சார்பில் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

You might also like