வடமாகாண சபை பிரச்சினையின் தீர்வு மக்கள் கைகளில்: பிரபா கணேசன்

வடமாகாண சபை பிரச்சினைக்கு தீர்வு மக்களின் கைகளுக்கு சென்றுள்ளது. மக்கள் தமது வாக்கு என்று சொல்லப்படும் ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டிய காலம் பலாத்காரமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது முன்னாள் பிரதி அமைச்சரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபை விவகாரம் தொடர்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த அறிக்கையில்,

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அரசியலுக்கு தான் வர விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தும் பலரது வற்புறுத்தலின் காரணமாகவே அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தார்.

இருப்பினும் அரசியலுக்கு வரும் பொழுது அவர் எதனை தெரிவித்திருந்தாரோ அதனடிப்படையிலேயே இன்று வரை செயல்பட்டு வருகின்றார்.

தனது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நேர்மையாக அவர் ஒரே கொள்கையுடன் செயல்பட்டு வந்தமையினை நாட்டிலுள்ள அனைத்து தமிழர்களும் அறிவார்கள்.

இன்று இவருக்கு எதிராக கொழும்பு வாழ் அரசியல் தலைமையின் கீழ் செயல்படும் நபர்கள் கொண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டமைப்பை இல்லாதொழித்துள்ளது.

தென்னிலங்கை சிங்கள அரசியல் தலைமைகள் ஏளனத்துடன் தமிழர்களை பார்க்கும் நிலைமையை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏற்படுத்தியிருப்பது மன வருத்தத்தினை அளிக்கின்றது.

இவை அனைத்திற்கும் எதிர்க்கட்சி தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனே பொறுப்புக் கூற வேண்டும் அல்லது அவரது ஆலோசகரும் சகாவுமான சுமந்திரன் பொறுப்பேற்க வேண்டும்.

ஊழல்கள் செய்ததாக கூறப்படும் அமைச்சர்களின் விவகாரத்தில் தான் தலையிடப் போவதில்லை என்று சம்பந்தன் அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இருப்பினும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வேறு விதமான கருத்துகளை முன்வைத்திருந்தார். இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த விவகாரம் உட்கட்சி மோதல் அல்ல. மாறாக வாக்களித்த தமிழ் மக்களின் போராட்டமாகும்.

நேர்மையாக செயல்பட்டு வந்த முதலமைச்சரின் கரங்களுக்கு கைவிலங்கு மாட்டுவதைப் போன்ற செயல்பாடாகும். கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடுகளை நான் விமர்சித்துள்ளேன்.

அதனைப் பார்த்து விமர்சித்தவர்கள் இன்று வாய்மூடி மௌனிகளாக இருக்க வேண்டியுள்ளது. தமிழ் மக்களுக்கு எதிராக எப்பொழுதுமே மறைமுகமாக செயல்பட்டு வரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரக்கட்சி தலைவர் பதவியை கொடுத்து இன்று கூட்டமைப்பின் பிரிவினைக்கு காரணமாக உள்ளார் என்பதனையும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்பிரச்சினையின் தீர்வு வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகளிடமிருந்து மக்களின் கைகளுக்கு சென்றுள்ளது. மக்கள் தமது வாக்கு என்று சொல்லப்படும் ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டிய காலம் பலாத்காரமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் சிந்தித்து செயல்படா விட்டால் தந்தை செல்வா கூறியதைப் போல் இலங்கை தமிழர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like