வடக்கு விவகாரம் சம்பந்தன் கையில்! மைத்திரி சொன்னது என்ன?

வட மாகாண சபையில் ஏற்பட்டிருக்கும் குழப்பமான அரசியல் சூழ்நிலையினால் தற்பொழுது பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பெரும் யுத்தத்தின் முடிவிற்குப் பின்னர் வட மாகாணம் தற்பொழுது மெல்ல மீண்டு வந்து கொண்டிருந்த நிலையில், மாகாண சபை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பமானது தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையில் பெரும் தடையாக வந்து நிற்கிறது.

வட மாகாண சபையின் அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டனர் என்ற சர்ச்சையும், பின்னர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கையும், அவ்வறிக்கையின் பிரகாரம் சம்பந்தப்பட்ட இரு அமைச்சர்களும் தாமாக முன் வந்து பதவி விலக வேண்டும் என்றும், மற்றைய அமைச்சர்கள் இருவரும் விடுப்பில் இருக்குமாறும் விக்னேஸ்வரன் நேற்று முந்தினம் மாகாண சபை அமர்வில் பேச,

அன்று இரவோடு இரவாக முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து அவரை மாற்றுவது என்று முடிவு செய்து 22 மாகாண சபை உறுப்பினர்கள் வடக்கு ஆளுநரைச் சந்தித்து கடிதம் அளித்தனர்.

இந்நிலையில், அதனைத் தொடர்ந்து மக்களிடையே ஏற்பட்ட எதிர்ப்பினால், 15 உறுப்பினர்கள் விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவிக்க, அதனை அவர்கள் ஆளுநரிடம் கடிதம் சமர்பித்திருக்கும் நிலையில், தமிழரசுக் கட்சி சார்பில் மற்றைய உறுப்பினர்களும் ஆளுநரைச் சந்தித்திருக்கிறார்கள்.

ஆக, விக்னேஸ்வரன் தரப்பில் 15 பேரும், சீ.வி.கே. சிவஞானம் தரப்பில் 15 பேரும் ஆளுநரைச் சந்தித்திருக்கின்றனர்.

இதனையடுத்து ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தொடர்பு கொண்டிருக்கிறார். வட மாகாண சபையின் தற்போதைய நிலை குறித்து எடுத்துரைத்திருக்கிறார்.

எனினும் வட மாகாண சபையின் இந்த குழப்பத்தில் தான் தலையிட முடியாது என்றும், எதிர்க் கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் என கூட்டமைப்பின் சார்பில் பெயர் குறிப்பிட விரும்பாத முக்கிய உறுப்பினர் ஒருவர் லங்காசிறியின் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த முடிவினை அடுத்து, ஆளுநர் சம்பந்தனுடன் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அதற்கு சம்பந்தன் இந்த எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்றும், நிலைமை அப்படியே இருக்கட்டும்.

இன்னும் ஒரு சில நாட்களின் தான் வடக்கிற்கு நேரடியாக சென்று நிலைமைகள் குறித்து ஆராய்வதாகவும் ஆளுநரிடம் தெரிவித்திருக்கிறார்.

எனவே, இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் மேலும் அரசியல் குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்றும், விரைவில் வடக்கின் இந்த குழப்பமான நிலைக்கு தீர்க்கமான முடிவினை சம்பந்தன் எடுப்பார் என்றும் அந்த உறுப்பினர் லங்காசிறிக்குத் தெரிவித்துள்ளார்.

You might also like