கிளிநொச்சி கல்லாறு கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

கிளிநொச்சி – கல்லாறு பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 4 பேரையும் எதிர் வரும் 29 ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நான்கு பேரையும் இன்று பிற்பகல் 5 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றின் நீதிவான் அறையில் நீதிபதி ஏ.ஏ ஆனந்த ராஜா முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தொரியவருவது,

கல்லாறு பகுதியில் ஆயுத முனையில் நாற்பது பவுன் நகை மற்றும் நான்கு இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 11 ஆம் திகதி இரவு கல்லாறு பகுதியில் உள்ள தனியார் வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து உட்சென்ற குழு ஒன்று அங்கிருந்த கடை உரிமையாளர் மற்றும் அங்கு தங்கியிருந்த நபர் மீதும் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன், அங்கு இருந்த பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட குழுவினர், கடை உரிமையாளரை அவரது வீட்டிற்கு ஆயுத முனையில் அச்சுறுத்தியவாறு அழைத்து சென்று வீட்டின் பின் கதவை உடைத்து உட்சென்ற குழுவினர் அங்கிருந்த பெண்கள் சிறுவர்களை அச்சுறுத்தி காதில் இருந்த தோடு உட்பட அனைத்து தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் முன்னெடுத்து வந்த நிலையில், இது தொடர்பில் நான்கு சந்தேக நபர்களை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் களவாடப்பட்ட பொருட்கள் சிலவற்றையும் மீட்டுள்ளனர்.

You might also like