விக்னேஸ்வரனை வெளியேற்றுவதே பிரதான இலக்கு! சட்டத்தரணி காண்டீபன்

புதிய அரசியலமைப்பினூடாக வழங்கப்படவுள்ள ஒற்றையாட்சி அமைப்பின் கீழான 13ஆவது திருத்தச்சட்டத்தினை ஒத்த அதிகாரங்களுடன்கூடிய தீர்வுத்திட்டமொன்றுக்கு வடகிழக்கு தமிழர்களை தயார்படுத்துவதோடு அதற்குத் தடையாகவுள்ள விக்னேஸ்வரனை வெளியேற்றுவதே பிரதான இலக்கு என சட்டத்தரணி காண்டீபன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபையில் எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் சுயமாக இயங்குவதற்கான எந்தவொரு அதிகாரத்தையும் கொண்டிராத முதலமைச்சர் ஒருவரினால் சுயமாக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு தொடர்பாக தமிழரசுக்கட்சி முன்வைக்கும் வாதங்கள் வரவுள்ள புதிய அரசியலமைப்பினூடாக வடகிழக்கு தமிழர்களுக்கு வழங்கப்படவுள்ள அதிகாரங்கள் தொடர்பில் நியாயமான சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

மாகாண சபை ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தன்மைகளை அறிந்துகொள்ள விசாரணைக்குழு ஒன்றை நியமிப்பதற்கு முதலமைச்ருக்கு 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் அதிகாரம் இல்லை என்பதை தமிழரசுக் கட்சியின் சட்டவல்லுனர்கள் தெரிந்தும்கூட, மாகாண சபையில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சிலரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஊடாக விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அவ்வாறு தமிழரசுக்கட்சி உறுப்பினர்களின் தூண்டுதலினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் மூலமாக ஒருபுறம் ஒற்றையாட்சி அமைப்பினுள் மாகாணசபையை இயங்கவைப்பதற்கும் மறுபுறம் முதலமைச்சர் விக்னேஸ்வரனை வெளியேற்றவும் சதி செய்து வருகின்றனர்.

எவ்வாறாயினும் விக்னேஸ்வரன் வடமாகாண மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலமைச்சர். ஆனாலும் அந்த நிறைவேற்று அதிகாரத்திற்குள் என்னென்ன விடயங்கள் இருக்கின்றது என்பது சட்டத்தில் தெளிவாக இல்லை. இருந்தாலும் தற்துணிவுடன் விசாரணைக்குழுவை அமைத்தார்.

இவ்வாறு விசாரணைக்குழு அமைக்கப்பட்டதன் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட சமூகம் ஒன்றினால் ஜனநாயகரீதியாக தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சபையொன்றின் அமைச்சர்கள் மீதான ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகளை விசாரித்து மக்களிடத்தில் நம்பிக்கையைக் கட்டயெழுப்பியுள்ளார்.

மத்திய அரசாங்கத்திற்குரிய அதிகாரங்களை மாகாண அமைச்சர்கள் மீது பிரயோகித்ததன் மூலம் அவர் தனது அதிகார வரம்பையும் மீறி செயற்பட்டார் என அறிக்கையிட்டிருப்பது ஆபத்தானது. ஆகவே இந்த அறிக்கையின் மூலமாக விசாரணைக்குழு உறுப்பினர்களின் நம்பகத்தன்மையயும் அவர்களுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயங்கள் குறித்தும் அவர்களது நிபுணத்துவம் பற்றியும் சந்தேகங்கொள்ளவைக்கிறது.

நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மாகாண நிரலிலுள்ள அதிகார விடயங்கள் மாகாணசபையின் கீழான குறித்த அமைச்சுக்குரியவை. இந்த அதிகார விடயங்கள் தொடர்பான நடவடிக்கைகளை மாகாண அமைச்சு எடுக்க முற்படுகின்றபோது அது மத்திய அரசுக்கான விடயம் என்று அரசியலமைப்பின் உறுப்புரைகளை வியாக்கியானம் செய்யும்வகையில் அறிக்கையிடும் அதிகாரம் மாகாணசபையின் கீழான எந்தவொரு விசாரணைக்குழுவுக்கும் கிடையாது என்பதுடன் அதனை அதிகார துஷ்பிரயோகமாக கொள்ளவும் முடியாது.

இந்த விசாரணைக்குழு அறிக்கையினை வைத்துக்கொண்டு அரசின் பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சி மறைமுகமாக, புதிய அரசியலமைப்பினூடாக வழங்கப்படவுள்ள ஒற்றையாட்சி அமைப்பின் கீழான 13ஆவது திருத்தச்சட்டத்தினை ஒத்த அதிகாரங்களுடன்கூடிய தீர்வுத்திட்டமொன்றுக்கு வடகிழக்கு தமிழர்களை தயார்படுத்துவதோடு அதற்குத் தடையாகவுள்ள விக்னேஸ்வரனை வெளியேற்றுவதே பிரதான இலக்கு.

இதேவேளை, முதலமைச்சர் விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையை நியாயப்படுத்துவதனூடாக இலங்கை அரசாங்கத்தின் ஒற்றையாட்சிக் கோட்பாட்டுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் நோக்கில் தமிழரசுக் கட்சி செயற்படுகின்றது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

You might also like