வடக்கு மாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் கையெழுத்துத் திரட்டும் பணிகள்

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசசபை ஊழியர்கள் கடந்த 19 ஆம் திகதி தமது கடமை நேரத்தில் கையெழுத்துத் திரட்டும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

வடக்கு மாகாண முதலமைச்சர் வசமுள்ள உள்ளூராட்சி அமைச்சின் கீழுள்ள கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் சுகாதாரத் தொழிளாலர்களாக கடமையாற்றும் சந்திரகுமார் ஸ்ரீபன், பிரகாஸ் ஆகிய இருவரும் கரைச்சிப் பிரதேசசபை அலுவலகத்தில் கையொப்பமிட்ட பின்னர் தமது கடமை நேரத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்காகக் கிளிநொச்சி வீதிகள், சந்தை, வீடுகள் என பல இடங்களுக்கும் சென்று மக்களிடம் கையொப்பம் வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்கள்.

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையின் செயலாளராக தற்போது க.கம்சநாதன் கடமையாற்றி வருகின்றார். இந்நிலையில் கரைச்சிப் பிரதேசசபையின் செயலாளரை மாற்றுமாறு கோரி கீதன் ச.ஸ்ரீபன், பிரகாஸ் உட்பட்ட சிலர் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வடமாகாண முதலமைச்சர் தன்வசமுள்ள உள்ளூராட்சி அமைச்சின் கீழுள்ள கரைச்சிப் பிரதேச சபையின் சுகாதாரத் தொழிலாழிகளை கடமை நேரத்தில் கையொப்பம் பெறும் நடவடிக்கைக்கு அனுமதித்துள்ளதன் ஊடாகவே அதிகாரத் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

கடமை நேரத்தில் அரச ஊழியர்கள் அரசியல் நோக்கம் கருதி முதலமைச்சருக்கு ஆதரவு கோரி கையொப்பம் பெறும் நடவடிக்கைக்கு உள்ளூராட்சி அமைச்சு என்ன வகையில் அனுமதி வழங்கியுள்ளது என்பதும் இவ்விடத்தில் அதிகாரத் துஸ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாகப் பலராலும் கவலை வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like