வள்ளுவர்பண்ணை பாலத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவு பெறாமையினால் மக்கள் பாதிப்பு

கிளிநொச்சி – ஊற்றுப்புலம் வள்ளுவர்பண்ணை கிராமத்திற்கான பிரதான வீதியில் காணப்படும் பாலத்தின் கட்டுமானப்பணிகள் உரிய காலத்தில் நிறைவு பெறாமையினால் அதனூடாக போக்குவரத்துச் செய்யும் பொதுமக்கள் பாதிப்பை எதிர் நோக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில்,

வள்ளுவர்பண்ணை கிராமத்திற்கான பிரதான வீதியில் காணப்படும் பாலத்தின் ஊடாக பயணிக்கும் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணித் தாய்மார் எனப் பலரும் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

வள்ளுவர்பண்ணை பிரதான வீதியைக் குறுக்கறுத்துச் செல்லும் முறிப்புக்குளம் ஆற்றுக்கான பாலம் அமைக்கப்படாமையினால் ஏற்கனவே அமைக்கப்பட்ட ஒடுங்கிய ஆபத்தான பாலம் ஊடாகவே பயணிக்க வேண்டியுள்ளது.

அத்துடன், மழை வெள்ளம் ஏற்படும் போது வாகனப் போக்குவரத்துக்கள் தடைப்படுகின்றன.

இதற்குரிய பாலம் ஒன்றினை அமைத்து தருமாறு பிரதேச செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.

இதனையடுத்து ஆயிரம் பாலங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பாலத்தின் கட்டுமானப்பணிகள் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் இதன் ஒப்பந்தக்காலம் கடந்த மே மாதம் 21ஆம் திகதி நிறைவு பெற்ற போதும் பாலத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவுறுத்தப்படவில்லை.

இந்த பாலம் அமைக்கப்படாமையினால் வள்ளுவர்பண்ணையில் வசித்து வரும் 85 வரையான குடும்பங்கள், பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணித் தாய்மார் மற்றும் முதியவர்கள் எனப்பலரும் அன்றாடம் ஆபத்தான முறையில் பயணிக்க வேண்டியுள்ளது என தெரிவித்தனர்.

மேலும், ஒப்பந்தக்காலம் நிறைவுபெற்ற போதும் இதன் கட்டுமானப்பணிகளை முன்னெடுப்பதற்கு இயற்கை தடையாக இருந்து வருகின்றது என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்ற போதும்,

பொதுமக்கள் டிசம்பர் மாதமளவிலேயே மழை பெய்தது அதற்கு முன்னர் ஓரளவு வேலைகளை நிறைவு செய்திருப்பின் இதன் பணிகள் நிறைவு பெற்றிருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.

You might also like