முத்திரை மோசடி விவகாரம் : கிளிநொச்சி பொலிஸ் நிலையம் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் பதவி முத்திரையையும், அவரது நாடாளுமன்ற கடிதத் தலைப்பையும் மோசமான முறையில் பயன்படுத்தியமை தொடர்பில் இன்றைய தினம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு சபாநாயகர் கரு ஜயசூரியவின் அறிவுறுத்தலுக்கமைவாக பாரிய குற்றவியல் செயலின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனது நாடாளுமன்ற பதவி முத்திரை மற்றும் கடிதத்தலைப்பு என்பவற்றை தொழிநுட்ப ரீதியாக மோசடியான முறையில் பயன்படுத்தி, அவர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் எழுதப்பட்ட கடிதத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த செயல் தனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலும் இலங்கை நாடாளுமன்ற இலட்சினைகளை அவமதித்து மோசடி செய்தமை தொடர்பிலும் அமைந்திருப்பதாக நேற்று(23) சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சிறீதரன் எம்.பி முறையிட்டிருந்தார்.

இதனைப் பாரதூரமான குற்றமாக கருதிய சபாநாயகர்,

இது குறித்து பொலிஸாரிடம் முறையிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் கூறியிருந்ததுடன் பொலிஸாரது கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற அமர்வுகளை முடித்துக்கொண்டு கிளிநொச்சி திரும்பிய சி.சிறீதரன் இன்று மதியம் 1.00 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் முறைப்பாட்டினைப் பதிவுசெய்துள்ளார்.

மேற்படி முறைப்பாட்டில் தனது நாடாளுமன்ற பதவி முத்திரை மற்றும் கடிதத்தலைப்பு என்பவற்றை மோசடியான முறையில் கையாண்டு தமது முகநூல்கள் வழியாகச் செய்தியாகப் பரப்பிய 16 இற்கு மேற்பட்ட முகநூல் சொந்தக்காரர்களும் 10 வரையான இணையத்தளங்களும் பெயர் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

You might also like