இரணைதீவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பங்குத்தந்தைக்கு அச்சுறுத்தல்!

இரணைதீவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த இரணைமாதா நகர் ஆலயத்தின் பங்குத்தந்தைக்கு காவல்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவத்தை தாம் வன்மையாக கண்டித்துள்ளதாக மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் செயலாளர் ஜோசப் கெனடி இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அவ்வறிக்கையில் ,

இரணைதீவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்களோடு மக்களாக களத்தில் இருந்து குரல் கொடுத்து வரும் இரணை மாதா நகர் ஆலயத்தின் பங்குத்தந்தை வண. பிதா அருள் செல்வன் அடிகளாருக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை அதிகாரியை மன்னார் மறைமாவட்டமும், மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியமும் வன்மையாக கண்டித்து நிற்கின்றது.

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் எமது கத்தோலிக்க குருக்கள் சகல இன மக்களுக்கும் பேராதரவாக மக்களோடு மக்களாக இருந்து ஆன்மீகப்பணி மட்டு மல்லாது, பொது பணிகள் மற்றும் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்துக் கொண்டு வருகின்றார்கள்.

எமது கத்தோலிக்க குருக்கள் யுத்தம் நடைபெற்ற வேளையில் கூட தங்களின் உயிர்களை தியாகம் செய்து இறுதி வரைக்கும் மக்களோடு மக்களாக இருந்து சேவை செய்ததை யாராலும் மறந்து விட முடியாது.

இவ்வாறு யுத்தம் நடை பெற்ற போது கூட குருக்கள் காணாமல் ஆக்கப்பட்ட நிலையிலும், செல்வீச்சிகளுக்குள் அகப்பட்டு உயிர் விட்ட நிலையிலும், இன்னமும் முன்னைய ஆட்சிக்காலத்தில் மக்களுடன் மக்களாக களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபடும் குருக்களை அச்சுறுத்தியும், தள்ளிவிட்டு சப்பாத்துக்காலால் உதைத்து தள்ளியும் துன்புறுத்தியதை நாம் நினைவுப்படுத்த விருப்புகின்றோம்.

இதே வேளை புதிய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சில வருடங்கள் கடந்த நிலையில் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஜனநாயக ரீதியில் மக்கள் தங்கள் உரிமைக்காக போராடுகின்ற வேளை அவர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி குரல் கொடுத்த இரணைமாதா நகர் ஆலயத்தின் பங்தந்தை வண. பிதா அருள் செல்வன் அடிகளாருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையினையும், கடும் தொனியிலான பயமுறுத்தலையும் மன்னார் மறைமாவட்டம் சார்பாகவும், மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் சார்பாகவும் வன்மையான கண்டனத்தையும் ஆதங்கத்தையும் வெளியிட்டு நிற்கின்றோம்.

இதே வேளை இவ்வாறு ஜனநாயக ரீதியில் மக்கள் போராடுகின்ற போது அரசாங்கமோ அல்லது அரசாங்கத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் அரச அதிகாரிகளோ, காவல்துறையினரோ மிகவும் சிந்திக்க வேண்டிய சில விடயங்களை முன் வைக்க விரும்புகின்றோம்.

1. மக்கள் எதற்காக போராடுகின்றார்கள் என்ற விடயத்தின் உரிய இடத்திற்கு சென்று முதலில் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

2. அடுத்து போராட்டம் செய்யும் மக்களிடத்தில் கலந்துரையாடலை நடாத்த வேண்டும்.

3. அவ்வாறு மக்கள் எதிர்ப்புக்களை தெரிவிக்கும் பொருட்டு மக்களின் சார்பாக அங்கே உள்ள மதக்குருக்கள், அரசியல்வாதிகள், மற்றும் கிராம தலைவர்களை அழைத்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு மக்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது ஒவ்வொரு அரசாங்க பிரதிநிதிகளுக்கும்,

காவல்துறையினருக்கும் காணப்படும் மிக முக்கிய பொறுப்பும், கடமையும் என்பதனை உணர்த்த விரும்புகின்றோம்.

இதை விடுத்து ஜனநாயக ரீதியில் போராட்டம் நடாத்தும் மக்களுக்கும், மத குருக்களுக்கும் கடும் தொனியில் அச்சுறுத்தல் விடுத்து, பயமுறுத்தி, செயற்பாடுகளை மேற்கொள்ளுவது சிறப்பான செயற்பாடாக அமையாது என்பதனை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

இவ்வாறு அச்சுறுத்தலை விடுவித்த காவல்துறை அதிகாரி உரிய மதகுருவிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் இனி மேலும் மத குருக்களுக்கு இவ்வாறான அச்சுறுத்தல்கள், கடும் தொனியிலான எச்சரிக்கைகள் விடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like