கிளிநொச்சி மாவட்டத்தில் நிர்ணய விலையில் மணல் விநியோகிக்கப்படும்: கிளி.அரச அதிபர்

கிளிநொச்சி மாவட்டத்தில் மாவட்ட சுற்றாடல் சிபாரிசுக்குழுவினால் நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே மணல் விநியோகிக்கப்பட வேண்டும் மீறுவோர் மீது உரிய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மணல் அகழ்வினை மேற்கொள்வதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ள சங்கங்கள் மற்றும் நபர்களுடன் மணல் அகழ்வு தொடர்பான கலந்துரையாடலில் தலைமையேற்று உரையாற்றுகையிலே இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

மாவட்டத்தில் மணல் அகழ்வினை மேற்கொள்ளும் பகுதியில் 10கிலோ மீற்றரிற்கு உட்பட்ட சுற்று வட்டாரத்தில் ஒரு உழவு இயந்திரப்பெட்டி( 3/4 cube) மணலின் பெறுமதி 4000 ரூபாவாகவும், மணல் அகழ்வுப்பிரதேசத்தின் 10 கிலோ மீற்றர் சுற்றுவட்டாரத்துக்கு அப்பால் உள்ள ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் 70ரூபா வீதம் அறவிடப்படும் எனக்குறிப்பிட்டார்.

இக் கலந்துரையாடலில் மாவட்ட சுற்றாடல் சிபாரிசுக்குழுவின் அனுமதியின்றி எந்தவித மணல் அகழ்வினை மேற்கொள்ள முடியாது எனவும் புதிய இடங்களில் மணல் அகழ்வை மேற்கொள்வதற்கு ஆய்வுகள் மேற்கொள்வதாகவும் அத்துடன் சட்ட விரோதமாக மணல் அகழ்வினை மேற்கொள்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மேலதிக அரச அதிபர் திரு சத்தியசீலன், கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர்கள் ,மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், பிராந்திய அகழ்வு பொறியியலாளர், மாவட்ட வனவள அலுவலர், நீர்ப்பாசன பொறியியலாளர் போன்றோர் கலந்து கொண்டனர்.

You might also like