வவுனியா வேப்பங்குளம் சிறுவர் இல்லத்தில் இருந்த சிறுமியின் மரணத்திற்கு பாடசாலை காரணமல்ல! காரணம் வெளியானது

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள அன்பகம் சிறுவர் இல்ல சிறுமி நேற்று மாலை 4.30மணியவில் தான் தங்கியுள்ள அன்பகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இச் சிறுமியின் மரணத்திற்கும் பாடசாலைக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் பி.கமலேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள அன்பகத்தில் இருந்து எமது பாடசாலைக்கு வந்து கல்வி கற்கும் மாணவர்களில் தரம் 6 மாணவி ஒருவரும் இருந்தார். றொக்சிகா என்ற குறித்த மாணவி வியாழக்கிழமை மாலை அன்பகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்திற்கு எமது பாடசாலை ஆசிரியர் ஒருவர் அந்த மாணவியை பேசியமையால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்கள் சிலவற்றில் செய்திகள் வெளியாகி இருந்தன.

ஆனால், அவை திட்டமிட்டு எமது பாடசாலைக்கு எதிராக புனையப்பட்ட கதை. அவ்வாறானதொரு சம்பவம் எதுவும் எமது பாடசாலையில் நடைபெறவில்லை. குறித்த மாணவி அன்றைய தினமும் வழமை போல் பாடசாலைக்கு வருகை தந்து பரீட்சை எழுதியிருந்தார். ஆசிரியர்களுடனும் சக மாணவர்களுடனும் வழமை போல் அன்பாக நடந்து கொண்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த மாணவி அன்பகம் சிறுவர் இல்லத்தில் தமக்கு இருக்கு விருப்பம் இல்லை எனவும், அங்கு துன்புறுத்துவதாகவும் கடிதம் மூலம் எம்மிடம் முறையிட்டு இருந்தார். இது தொடர்பில் நாம் மாணவியிடம் கேட்டறிந்து ஆலோசனைகளையும் வழங்கியிருந்தோம். வேறு ஒரு மாணவியும் அன்பகம் தொடர்பில் எம்மிடம் முறைப்பாடு செய்திருந்தார். நாம் உடனடியாகவே சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரியிடம் குறித்த விடயத்தை தெரியப்படுத்தியிருந்தோம்.

இவ்வாறான நிலையில் குறித்த மாணவியின் மரணம் நிகழ்ந்துள்ளது.  இந்த மரணத்திற்கும் பாடசாலைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அந்த மாணவியின் இழப்பால் பாடசாலை சமூகம் சோகத்தில் உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த மாணவியால் எழுத்தப்பட்ட கடிதம் வவுனியா பொலிசாரால் பாடசாலையில் இருந்து பெறப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அன்பகம் சிறுவர் இல்லத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் சில மாதங்களுக்கு முன்னரும் தூக்கில் தொங்கி மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like