கிளிநொச்சியில் டெங்கு நோய் விழிப்புணர்வு கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தில் கைவிடப்பட்ட, பராமரிப்புக்கள் இன்றிக் காணப்படுகின்ற காணிகளால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்காலத்தில் பராமரிப்பின்றிக் காணப்படும் காணிகள் வீடுகளின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டெங்கு தொடர்பான கலந்துரையாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெங்கு நோய் விழிப்புணர்வு தொடர்பான கிளிநொச்சி மாவட்ட மட்டத்தில் கலந்துரையாடல் நேற்று  (30) பிற்பகல் 3.00 மணியளில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றள்ளது.

மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ்.சத்தியசீலன் கிளிநொச்சி பிராந்திய மலேரியா தடை இயக்கத்தின் பொதுவைத்திய அதிகாரி மா.ஜெயராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதில் தொடர்பில் வைத்திய அதிகாரி ம.ஜெயராஜா கருத்துத் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோயின் பாதிப்புக்கள் கணிசமான அளவு இருந்தாலும் உயிரிழப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை.

அத்துடன், மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

கரைச்சி கண்டாவளை பூநகரி பளை ஆகிய பகுதிகளில் மக்கள் குடியிருப்புக்கள் பாடசாலைகளுக்கு அருகில் பல காணிகள் பராமரிப்புக்கள் இன்றி பற்றைக்காடுகள் மண்டிக் காணப்படுகின்றன.

இதனால் நுளம்புகளின் பெருக்கம் காணப்படுவதுடன் சூழலுக்கு பல்வேறு பாதிப்புக்கள் காணப்படுகின்றன என பலரும் கருத்துத் தெரிவித்ததையடுத்து இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் இவ்வாறு பராமரிப்பின்றிக் காணப்படும் காணிகளை துப்பரவு செய்யுமாறு அதன் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துமாறும் அவ்வாறு தவறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், வைத்திய அதிகாரிகள் பூநகரி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் செயலாளர்கள் பொலிசார் அரச திணைக்கள அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

You might also like