புலம்பெயர்ந்து சென்றவரின் காணியிலிருந்து உடன் வெளியேறுமாறு வவுனியா பிரதேச செயலகம் அறிவிப்பு

வவுனியா பாலமோட்டை கிழவிகுளம் பகுதியில் புலம்பெயர்ந்து சென்ற பெ. ஆறுமுகம் என்பவரது காணியினை அப்பகுதியைச் சேர்ந்த சி. தேவசிங்கம் என்பவர் சட்டவிரோதமான முறையில் அபகரித்து அதில் தங்கியுள்ளார். எனவே காணி உரிமையாளர் தற்போது தனது காணியினை விடுவிக்குமாறு கோரி வவுனியா பிரதேச செயலகத்தில் மனு ஒன்றினை கையளித்துள்ளார் எனவே சட்டவிரோதமான முறையில் புலம் பெயர்ந்து சென்றவரின் காணியினை அபகரித்து தங்கியுள்ளவர் உடனடியாக அக்காணியிலிருந்து வெளியேறுமாறு வவுனியா பிரதேச செயலகம் அறிவித்துள்ளது

இது விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கடந்த 2007ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக வவுனியா பாலமோட்டை கிளவிகுளம் பகுதியிலிருந்து தனது குடும்பத்தினருடன் இந்தியாவிற்கு அகதியாகச் சென்றுள்ளார் தற்போது ஏற்பட்டுள்ள சாதாகமான சூழ்நிலையினையடுத்து வவுனியாவில் வசிப்பதற்கு கடந்த 6மாதங்களுக்கு முன்னர் வந்துள்ளார். பாலமோட்டை கிளவிகுளம் பகுதியிலுள்ள தனது காணியினை சென்று பார்வையிட்ட போது அவருக்கு அதிர்ச்சியான தகவல் ஒன்று காத்திருந்துள்ளது குறித்த தனது (பெ. ஆறுமுகம் என்பவருடைய) காணியினை அப்பகுதியிலுள்ள சி. தேவசிங்கம் என்பவர் சட்டவிரோதமான முறையில் காணியினை அபகரித்து தங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து காணியின் உரிமையாளர் தனது காணியினை மீட்டுத்தருமாறு வவுனியா பிரதேச செயலாகத்தில் முறைப்பாடு மேற்கொண்டார். இதையடுத்து வவுனியா பிரதேச செயலகம் மேற்கொண்ட விசாரணையின்போது பெ. ஆறுமுகம் என்பவரது பெயரிலேயே காணி அனுமதிப்பத்திரம் உள்ளது தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் காணியில் தங்கியுள்ளவரை உடனடியாக குறித்த காணியிலிருந்து வெளியேறுமாறு வவுனியா பிரதேச செயலகம் அறிவுறுத்தியுள்ளது. குறித்த பாலமோட்டை கிளவிகுளம் பகுதியில் தற்போது சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ளவர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிபாரிசுடன் மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்திற்குச் சென்று குறித்த சட்டவிரோதமான முறையில் அபகரித்த காணியினை தனது பெயரில் பதிவு செய்து ஆவணம் ஒன்றினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து வவுனியா பிரதேச செயலகம் முழுமையான நடவடிக்கையினை மேற்கொள்ள முடியாமல் உள்ளதாக காணி உரிமையாளர் தெரிவித்துள்ளதுடன் வடமாகாண காணி ஆணையாளர் அலுவலகத்திற்குச் சென்று தனது நிலைமைகளை தெரியப்படுத்தியும் அவர்கள் தனது விடயத்தில் நடவடிக்கை மேற்கொள்ள தாமதப்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

You might also like