வித்தியா கொலையுண்ட இடத்தில் முனங்கல் சத்தம் கேட்டது! வெளியாகும் புதிய ஆதாரம்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட இடத்தில் முனங்கல் சத்தம் கேட்டதாக “ட்ரயல் அட்பார்” தீர்ப்பாயத்தில் 13 வயதான சிறுவன் ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய “ட்ரயல் அட்பார்” தீர்ப்பாயம் முன்னிலையில் தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்றைய தினம் இடம்பெற்ற விசாரணைகளின் போது மணிவண்ணன் தனுராம் என்ற சிறுவன் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.

இதன் போது “சம்பவம் இடம்பெற்ற நாளன்று நானும் எனது, நண்பனும் துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்தோம்.

இதன்போது எனது நண்பனின் பாதணி கழன்று விழுந்துவிட்டது. அதனை எடுப்பதற்காக பின் நோக்கி ஓடியபோது முனங்கல் சத்தம் கேட்டது.

எனினும், குறித்த இடம் பாழடைந்த இடமாக காணப்பட்டமையினால் பேய் என நினைத்து பயந்து ஓடியதாக” குறித்த சிறுவன் சாட்சியமளித்திருந்தார்.

மேலும், அந்த இடத்திலிருந்து ஓடும்போது வித்தியா கொலை வழக்கின் 2ஆம் எதிரி வீதியில் நின்றுகொண்டிருந்ததை தான் கண்டதாகவும் சாட்சியமளித்துள்ளார்.

இதேவேளை, சாட்சியமளித்திருந்த குறித்த சிறுவனோடு அன்றைய தினம் பயணித்த தனுஜன் என்ற சிறுவனிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதன் போது அன்றைய தினம் தனது காலணி கழன்று விழுந்ததாகவும், அதனை தனது நண்பனே எடுக்க பின்னால் ஓடியதாகவும் உறுதி செய்திருந்தார்.

You might also like